நாமக்கல் அரசு பள்ளியில் சேர கொல்லிமலை மாணவர்கள் ஆர்வம்
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதால், ஆண்டுக்கு ஆண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் நாமக்கல் நகரம் மற்றும் கொல்லிமலையில் மாணவர் சேர்க்கை குறித்த கல்வி விழிப்புணர்வு களப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆசிரியர்கள் குழுவினர், பெற்றோர்களை நேரில் சந்தித்து, அரசு பள்ளியில் படித்தால் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வியில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு மற்றும் 14 வகையான நலத்திட்டங்கள் குறித்து விளக்கினர்.
அதன் பயனாக, இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பு அடைந்து உள்ளது. குறிப்பாக கொல்லிமலை பகுதியில் இருந்து ஏராளமான பெற்றோர், தங்கள் குழந்தைகளை சேர்த்து வருகின்றனர். நேற்றும் மாணவர் சேர்க்கை நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் பெரியண்ணன், துணை தலைமையாசிரியர் ஜெகதீசன் மற்றும் ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் சேர்க்கை பெற்று இருப்பதாகவும், நேற்று மட்டும் கொல்லிமலை பகுதியை சேர்ந்த மாணவர்கள் 15 பேர் சேர்க்கை பெற்று இருப்பதாகவும் ஆசிரியர்கள் கூறினர்.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து இருப்பதால், பெற்றோர் ஆர்வமுடன் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளை சேர்த்து வருவதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.