இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x

விபத்தில் காயம் அடைந்த விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

திண்டுக்கல்

பழனி அருகே உள்ள வல்லக்குண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் கருப்பணன் (வயது 85). விவசாயி. இவர், கடந்த 2012-ம் ஆண்டு கொத்தயத்தில் இருந்து அரசு டவுன் பஸ்சில் காளிப்பட்டிக்கு வந்தார். காளிப்பட்டி பஸ்நிறுத்தத்தில் இறங்கியபோது, பஸ்சை டிரைவர் நகர்த்தியதால் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து கருப்பணன், தனக்கு இழப்பீடு வழங்கக்கோரி பழனி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 2019-ம் ஆண்டு வழக்கை விசாரித்த கோர்ட்டு, விபத்து இழப்பீடாக 2012-ம் ஆண்டில் இருந்து வட்டியுடன் சேர்த்து ரூ.5 லட்சத்து 77 ஆயிரத்தை வழங்க உத்தரவிட்டது. ஆனால் விபத்து இழப்பீடு வழங்காமல் அரசு போக்குவரத்து கழகம் காலதாமதம் செய்து வந்தது.

இந்நிலையில் கருப்பணன், பழனி கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிபதி கருணாநிதி, பாதிக்கப்பட்ட கருப்பணனுக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து கோர்ட்டு ஊழியர்கள் நேற்று காலை பழனி பஸ்நிலையத்தில் இருந்து கும்பகோணம் செல்வதற்காக நின்ற அரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.


Next Story