நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x

ராணிப்பேட்டையில் விபத்தில் காயமடைந்த மாணவனுக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை

விபத்தில் மாணவன் காயம்

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவை அடுத்த குடிமல்லூர் கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் துரை. இவரது மகன் சீனிவாசன் (வயது 14). வாலாஜாவில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந் தேதி சீனிவாசன் பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு சைக்கிளில் சென்றுள்ளான்.

எம்.பி.டி. சாலையில் வாலாஜா ஸ்டேட் வங்கி அருகே சென்றபோது, சென்னையில் இருந்து ஆற்காடு நோக்கி எதிரே வந்த அரசு பஸ், சீனிவாசன் மீது மோதியது. இதில் சீனிவாசனுக்கு கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றான்.

அரசு பஸ் ஜப்தி

சீனிவாசனின் தாயார் ஜெயலட்சுமி, நஷ்டஈடு கேட்டு ராணிப்பேட்டை கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இதில் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி சீனிவாசனுக்கு ரூ.6,34,260 நஷ்ட ஈடு வழங்க ராணிப்பேட்டை கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் நஷ்ட ஈடு வழங்கவில்லை. அதைத்தொடர்ந்து சீனிவாசன் தரப்பினர் கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர்.

இதனை அடுத்து, ராணிப்பேட்டை இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று சென்னையில் இருந்து ஆற்காடு நோக்கி சென்ற அரசு பஸ்சை முத்துக்கடையில், கோர்ட்டு அமீனா செல்வா, மனுதாரர் சீனிவாசன் மற்றும் வக்கீல் அண்ணாதுரை ஆகியோருடன் சென்று ஜப்தி செய்தார். பஸ்சில் இருந்த பயணிகள் வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ் ராணிப்பேட்டை கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story