இழப்பீடு தொகை வழங்காததால் அரசு பஸ்சை ஐப்தி
விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்காததால் அரசு பஸ்சை ஐப்தி செய்து குளித்தலை நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது.
விபத்தில் வாலிபர் பலி
திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அருகே உள்ள எஸ்.புதுக்கோட்டை பகுதியை சேர்த்தவர் கர்ணன் (வயது 32). இவர் கம்பரசம்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது அரசு பஸ் மோதி கடந்த 2017-ல் இறந்தார். இதையடுத்து இழப்பீடு தொகை கேட்டு அவரது குடும்பத்தினர் குளித்தலை சார்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகக்கனி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு தொகையாக ரூ.17 லட்சம் வழங்க வேண்டும் என தீர்ப்பு கூறினார். இதன் பின்னரும் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு தொகை வழங்காததால், கர்ணன் குடும்பத்தார் கடந்த 2022-ல் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர்.
அரசு பஸ் ஜப்தி
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகக்கனி இழப்பீடு தொகையாக ரூ.24 லட்சத்து 30 ஆயிரம் வழங்க வேண்டும், இல்லையெனில் அரசு பஸ்சை ஜப்தி செய்ய வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு கூறினர்.இதன் பின்னரும் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு தொகை வழங்காததால் நேற்று குளித்தலை பஸ் நிலையத்திற்கு வந்த அரசு பஸ் ஒன்றை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.