வனப்பகுதியை அழித்து விளையாட்டு வளாகம் அமைக்கும் பணியை அரசு கைவிட வேண்டும்: சீமான்
காடுகளை அழித்து, விளையாட்டு வளாகம் அமைக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தென்காசி மாவட்டம், பாட்டாக்குறிச்சி வனப்பகுதியை அழித்து விளையாட்டு வளாகம் அமைக்கும் பணியினை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்காசி மாவட்டம், பாட்டாக்குறிச்சி கிராமம் அருகில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காடுகளை அழித்து, தமிழ்நாடு அரசு புதிதாக விளையாட்டு வளாகம் அமைக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது. வளர்ச்சி என்ற பெயரில் தொடர்ச்சியாக காடுகள், மலைகள், வேளாண் விளைநிலங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களை திமுக அரசு அழிக்க முயல்வது வருங்காலத் தலைமுறையினருக்குச் செய்கின்ற பச்சைத் துரோகமாகும்.
தென்காசி மாவட்டம், பாட்டாக்குறிச்சி கிராமத்தில் உள்ள வனப்பகுதியானது பல்லாயிரக்கணக்கான மான்கள் உலவுகின்ற வாழ்விடமாக திகழ்கின்றது. தென்காசி நகரத்தின் வடக்கிலும், கிழக்கிலும் உள்ள புல்வெளிகளும், குன்றுகளிலும் அதனை ஒட்டியுள்ள குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளிலும் கோடைக்காலங்களில் கூட மான்களுக்கு தேவையான உணவும், குடிநீரும் கிடைத்து வருகின்றன. அந்த அளவிற்கு மான்களின் புகலிடமாக விளங்கும் வனப்பகுதியானது கடந்த சில ஆண்டுகளாக தென்காசி நகரத்தைச் சுற்றி உருவாகி வரும் .குடியிருப்புப் பகுதிகள் மற்றும் தொழில்சார் நிறுவனங்கள் காரணமாக ஆக்கிரமிக்கப்பட்டு வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது.
அக்கொடுமைகளின் உச்சமாக தற்போது பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பாட்டாக்குறிச்சி வனப்பகுதியில் உள்ள அடர்த்தியான மரங்களை வெட்டி அழித்து, அந்நிலத்தின் தன்மையை செயற்கையாக மாற்றி விளையாட்டு வளாகம் அமைக்கும் பணியை திமுக அரசு தீவிரமாக முன்னெடுத்து வருவது வேதனையளிக்கிறது. இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் அக்கொடும்பணிகள் இன்றுவரை நிறுத்தப்படவில்லை. இது முழுக்க முழுக்க தென்காசியின் பல்லுயிர் பெருக்கச்சூழலையும், இயற்கை அழகையும் அழித்தொழிக்கும் திமுக அரசின் முயற்சியேயாகும்.
ஆகவே, தென்காசி நகரத்தின் சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் வகையில் பாட்டாக்குறிச்சி வனப்பகுதியில் திமுக அரசு அமைத்து வரும் விளையாட்டு வளாகப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். மாறாக, திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு தொடர்ந்தால் பாட்டாக்குறிச்சி வனப்பகுதியைப் பாதுகாக்க நாம் தமிழர் கட்சி மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுக்கும் என்றும் அதன் தொடக்கமாக நாளை (16-12-2023) தென்காசியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.