நடந்து முடிந்த குரூப் - 4 தேர்வு மூலம் குறைந்தபட்சம் 15000 காலி பணியிடங்களையாவது நிரப்ப அரசு முன்வர வேண்டும் - சீமான்


நடந்து முடிந்த குரூப் - 4 தேர்வு மூலம் குறைந்தபட்சம் 15000 காலி பணியிடங்களையாவது நிரப்ப அரசு முன்வர வேண்டும் - சீமான்
x

நடந்து முடிந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் - 4 தேர்வு மூலம் குறைந்தபட்சம் 15000 காலி பணியிடங்களையாவது நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

நடந்து முடிந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் - 4 தேர்வு மூலம் குறைந்தபட்சம் 15000 காலி பணியிடங்களையாவது நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குரூப் - 4 தேர்வு மூலம் நடப்பு கலந்தாய்வில் குறைந்தபட்சம் 15000 பணியிடங்களையாவது நிரப்ப வேண்டுமென்று தேர்வர்கள் போராடி வரும் நிலையில், ஊடகங்களில் 600க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களைச் சேர்ப்பதாக அதாவது, 10117 இல் இருந்து 10,748 பணியிடங்களாக ஊடகங்கள் மூலம் அறிவித்துவிட்டு, அரசு பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் வெறும் 60 காலிப் பணியிடங்களை மட்டும் அதிகரித்து 10,178 பணி இடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

அரசுத்துறைகளில் மூன்றரை இலட்சத்திற்கும் மேல் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் கூடுதலாக வெறும் 5000 பணியிடங்களை நடப்பு கலந்தாய்வில் நிரப்ப வேண்டுமென்ற தேர்வெழுதிய இளைஞர்களின் கோரிக்கை மிக மிக நியாயமானதாகும். அதனைக்கூட திமுக அரசு ஏற்க மறுப்பது இளைஞர்களின் அரசுப்பணிக் கனவை சிதைக்கும் கொடுஞ்செயலாகும்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தால் 3.5 இலட்சம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவோம் என வாக்குறுதி அளித்த திமுக, அதிகாரத்தை அடைந்த பிறகு அதனை நிறைவேற்றாமல் ஏமாற்றுவது வாக்களித்து ஆட்சியில் அமர்த்திய தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் இரண்டு ஆண்டுகள் அரசு தேர்வுகள் நடைபெறவில்லை என்பதாலும், அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆக அதிமுக அரசு அதிகரித்த காரணத்தாலும் அரசு தேர்வெழுதும் போட்டித் தேர்வர்களின் எண்ணிக்கை தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக அரசால் நிரப்பப்பட்ட அரசுப் பணியிடங்களை விட, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதினால் உருவான காலிப் பணியிடங்கள் மிக அதிகமாகவும் உள்ளது. இதனால் அரசுத்துறைகளின் செயல்பாட்டில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டு, அரசின் திட்டப்பணிகள் மக்களை முழுமையாக சென்றடையாத மந்தநிலையும் உருவாகியுள்ளது.

ஆகவே, தமிழ்நாடு அரசு தேர்வெழுதும் இலட்சக்கணக்கான தமிழ் இளைஞர்களின் ஒருமித்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நடந்து முடிந்த குரூப் 4 மூலம் நிரப்பப்படும் பணியிடங்களின் எண்ணிக்கையை கலந்தாய்வுக்கு முன்பாக 15000 ஆக உயர்த்தி உடனடியாக அரசாணை வெளியிட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story