நீட் தேர்வில் 216 அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தேர்ச்சி


நீட் தேர்வில் 216 அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தேர்ச்சி
x
தினத்தந்தி 15 Jun 2023 3:57 PM IST (Updated: 15 Jun 2023 4:20 PM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வில் 216 அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தேர்ச்சி

திருப்பூர்

திருப்பூர், ஜூன்.16-

திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் 216 மாணவ-மாணவிகள் தகுதி மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நீட் தேர்வில் 216 பேர் தேர்ச்சி

இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் இந்திய அளவில் தமிழக மாணவர் முதலிடம் பிடித்தார். முதல் 10 இடங்களில் 4 பேர் தமிழக மாணவர்கள் இடம் பிடித்தனர். திருப்பூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவசமாக நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. திருப்பூர், தாராபுரம், உடுமலை பகுதிகளில் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

மாவட்டத்தில் 437 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினார்கள். 720 மதிப்பெண்களுக்கு குறைந்தபட்சம் 107 மதிப்பெண் தகுதி மதிப்பெண்ணாக அறிவிக்கப்பட்டது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 216 பேர் தகுதி மதிப்பெண்ணுக்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று உள்ளனர். அதிகபட்சமாக அய்யன்காளிபாளையம் அரசு பள்ளியை சேர்ந்த மாணவர் 555 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

இதுபோல் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளி, கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெருமாநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குன்னத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இடுவம்பாளையம் அரசு பள்ளி, கணபதிபாளையம் அரசு பள்ளி, காங்கயம் அரசு பள்ளி, கணபதிபாளையம் அரசு பள்ளி, பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வில் அதிகம் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்க்கை கலந்தாய்வு கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் இவர்களுக்கு மருத்துவ படிப்பு படிக்க வாய்ப்பு கிடைக்கும். அவ்வாறு அரசு பள்ளிகளில் இடம் கிடைக்காதவர்கள், பணம் செலுத்தி தனியார் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

அரசு மருத்துவக்கல்லூரி

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறும்போது, 'கடந்த ஆண்டு மாவட்டத்தில் 184 பேர் தகுதி மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்கள். அவர்களில் மதிப்பெண் அடிப்படையில் 33 பேருக்கு அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படிக்க இடம் கிடைத்து படித்து வருகிறார்கள். இந்த ஆண்டு 216 பேர் தகுதி மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட அதிக மாணவர்கள் தகுதி மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். மதிப்பெண் அடிப்படையில் இவர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் சேர வாய்ப்புள்ளது' என்றார்.

----

Reporter : M.Sivaraj_Staff Reporter Location : Tirupur - Tirupur


Related Tags :
Next Story