பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்: போட்டித் தேர்வுக்கான 'ஹால்டிக்கெட்' வெளியீடு


பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்: போட்டித் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு
x

கோப்புப்படம்

விண்ணப்பித்த தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காகத் தேர்வு நடத்துவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த தேர்வின் மூலம் 2,222 பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ் பாடப்பிரிவில் 394 பேரும், ஆங்கில பாடப்பிரிவில் 252 பேரும், கணிதத்தில் 233 பேரும், இயற்பியல் பாடப்பிரிவில் 292 பேரும் என மொத்தம் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது மட்டுமின்றி வட்டார வள மைய கருத்தாளர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

இந்நிலையில் ஜனவரி மாதம் 7 ஆம் தேதி நடைபெற உள்ள பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பின்படி 2023-2024 ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் தேர்வு வரும் ஜனவரி 7 ஆம் தேதி (07.012024) நடத்தப்பட உள்ளது. இத்தேர்வினை எழுத 41 ஆயிரத்து 478 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தளத்தில் https://www.trb.tn.gov.in/பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் அவர்களது பயனர் ஐடி (User id) மற்றும் கடவுச் சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேர பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story