கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
கீழக்கரை,
கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 30-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கல்லூரி முதல்வர் சுமையா வரவேற்றார்.ஆண்டறிக்கையும் வாசித்தார். கல்லூரி தாளாளர் மருத்துவர் ரஹ்மத்துன்னிசா அப்துர்ரஹ்மான் முன்னிலை வகித்தார். விழாவில் தமிழக அரசின் பால் உற்பத்தி மற்றும் பால் வளத்துறை அமைச்சர் டி.மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இளநிலைப்பிரிவில் 617, முதுநிலைப்பிரிவில் ஆய்வியல் நிறைஞர் பிரிவில் 5 உள்பட 705 மாணவிகளுக்கு பட்டமும் 46 மாணவிகளுக்கு வெள்ளிப்பதக்கங்களும் வழங்கினார்.
பின்னர் மாணவிகளுக்கான முபல்லிகா சனது பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் வர்மக்கலை மருத்துவர் மவுலானா முப்தி எஸ்.ஏ.எச். உமர் பாரூக் மலாஹிரி மற்றும் திருச்சி இமாம் கலீபா மஜீத் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்கள். மேலும் ஓய்வுபெற்ற ஆசிரியர் கே.எம்.வி. ஆபிதா பேகம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சுமார் 210 மாணவிகளுக்கு முபல்லிகா சனது பட்டமும் 2 வெள்ளிப்பதக்கங்களையும் வழங்கினார்.
விழாவில் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். இவ்விரு நிகழ்வுகளிலும் கல்லூரி ஆராய்ச்சி மற்றும் தொழில் நிறுவன தொடர்பு இயக்குனர் இர்பான் அகமது மற்றும் பேராசிரியர் முத்து மாரீஸ்வரி, பல்வேறு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பெற்றோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளையின் துணைப் பொது மேலாளர் சேக் தாவூத்கான் தலைமையில் உள்தர உத்திரவாதக் குழுவினர் செய்திருந்தனர்.