பாரதிதாசன் பல்கலைக்கழகம் முன்பு 30-ந் தேதி பட்டம் விடும் போராட்டம்
பாரதிதாசன் பல்கலைக்கழகம் முன்பு 30-ந் தேதி பட்டம் விடும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் சூர்யா, மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் மிக முக்கிய பல்கலைக்கழகமான பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி மாவட்டத்தை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகம் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கரூர், பெரம்பலூர், மயிலாடுதுறை என பல்வேறு மாவட்டங்களில் 123 கல்லூரிகளில் ஆட்சி செலுத்தி வருகிறது. இந்தநிலையில் படித்து முடித்த மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் பட்டம் வழங்காமல் இருக்கிறது. இது குறித்து பல்கலைக்கழக தரப்பில் கேட்டபோது, கவர்னர் ஆர்.என்.ரவி உரிய அனுமதி வழங்காமல் இருப்பதாக கூறுகிறார்கள். இதனால் படிப்பை முடித்த மாணவர்களுக்கு உரிய பட்டம் கிடைக்காமல் இருப்பதால் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் கூலி வேலைக்கு சென்று வருகிறார்கள். இதனால் மாணவர்களின் எதிர்காலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு உயர் கல்வித்துறை உடனடியாக தலையிட்டு படித்து முடித்து 2 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பட்டம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 30-ந் தேதி பாரதிதாசன் பல்கலைக்கழக நுழைவுவாயில் முன்பு பட்டம் விடும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.