தூத்துக்குடி: கப்பலில் கிரேன் விழுந்து ஒருவர் பலி
தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் கிரேன் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒருவர் பலியானார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கயனா நாட்டு கப்பலில் எகிப்து நாட்டுக்கு நிலக்கரி ஏற்றும் பணிகள் நேற்று முன் தினம் முதல் நடைபெற்று வருகிறது. இந்த பணியின் போது கப்பலில் உள்ள கிரேன் மூலமாக லாரிகளில் உள்ள நிலக்கரி கப்பலில் ஏற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்றைய பணியின் போது கிரேனை பாரத் என்ற ஆபரேட்டர் இயக்கியுள்ளார். அப்போது திடீரென கிரேன் உடைந்து கப்பலின் உள்ளே விழுந்துள்ளது. இதில், கிரேன் ஆபரேட்டர் பாரத் பலத்த காயம் அடைந்தார். அவர் கிரேனுக்கு அடியில் சிக்கிக்கொண்டதையடுத்து மற்றொரு கிரேன் உதவியுடன் பாரத் மீட்கப்பட்டு அருகில் உள்ள வவுசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பாரத் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தெர்மல் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.