322 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம்
மாவட்டத்தில் 322 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் இன்று (புதன்கிழமை) காலை 11 மணி அளவில் 2023-2024-ம் ஆண்டிற்கான கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரித்தல் தொடர்பான முதலாவது கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கிராம சபை கூட்டத்தில் அந்தியோதய இயக்க கணக்கெடுப்பு மூலமாக கிராம வளர்ச்சிக்கான தேவை விவரம் கண்டறியப்பட்ட கணக்கீட்டின் அறிக்கைக்கு ஒப்புதல் பெறுவதோடு, ஊராட்சி மன்ற தலைவர் தலைமையிலான கிராம வளர்ச்சி திட்டமிடல் குழுவிற்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட உள்ளது. வருகிற 22-ந் தேதி உலக தண்ணீர் தினந்தன்று கூட்டப்படும் 2-வது கிராம சபை கூட்டத்தில் 2023-2024-ம் ஆண்டிற்கான கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டமானது ஒப்புதல் பெறப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.