பெரம்பலூர் மாவட்டத்தில் 120 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்


பெரம்பலூர் மாவட்டத்தில் 120 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்
x

தொழிலாளர் தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் 120 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அம்மாபாளையத்தில் ஒத்தி வைக்கப்பட்டது.

பெரம்பலூர்

கிராமசபை கூட்டம்

தொழிலாளர் தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 120 கிராம ஊராட்சிகளில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அந்தந்த கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமை தாங்கினர். துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர். வேப்பந்தட்டை ஒன்றியம், தேவையூர் ஊராட்சிக்குட்பட்ட மங்களமேட்டில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் கற்பகம், பிரபாகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், இந்த ஊராட்சியில் ரூ.138.53 லட்சம் மதிப்பீட்டில் 73 பணிகள் எடுக்கப்பட்டு, இதுவரை 15 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள பணிகள் விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.

நம்ம ஊரு சூப்பரு

கூட்டத்தில் கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதும், அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளும் மக்களிடையே கேட்டறியப்பட்டது. ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் நிர்வாக பணிகள் குறித்த பதிவேடு கிராம பொதுமக்கள் முன்னிலையில் வைக்கப்பட்டது. கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் தீர்மானங்களை கிராம பொதுமக்கள் முன்பு வாசித்தார். மேலும் மத்திய-மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது.

அனைத்து துறை வாரியான அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறை தொடர்பான திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கி பேசினர். முடிவில் நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டத்தின் கீழ் கிராமத்தினை தூய்மையாக பராமரிப்பது தொடர்பாக உறுதி மொழி ஏற்கப்பட்டது.

அம்மாபாளையத்தில் ஒத்திவைப்பு

பெரம்பலூர் ஒன்றியத்துக்குட்பட்ட அம்மாபாளையம் ஊராட்சியில் நடைபெற இருந்த கிராம சபை கூட்டத்திற்கு துணைத்தலைவர், பொதுமக்கள் வந்து காத்திருந்தனர். ஆனால் கூட்டத்தை தலைமை ஏற்று நடத்த ஊராட்சி மன்ற தலைவர் வரவில்லை. இந்தநிலையில், ஊராட்சி மன்ற தலைவர் இல்லாமல் கிராம சபை கூட்டத்தை நடத்தக்கூடாது என்று பொதுமக்கள் அங்கு வந்திருந்த பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் கூறினர்.

இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் வராததால் அம்மாபாளையத்தில் கிராம சபை கூட்டத்தை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒத்தி வைத்தனர். அதனை தொடர்ந்து நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து வீட்டிற்கு சென்றனர்.


Next Story