மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி: தமிழக அரசு ஆலோசனை


மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி: தமிழக அரசு ஆலோசனை
x
தினத்தந்தி 7 Dec 2023 12:55 PM GMT (Updated: 7 Dec 2023 1:28 PM GMT)

குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியதாவது,

கடந்த 24 மணி நேரத்தில் மீட்பு பணிகளில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு சில பகுதிகளைத் தவிர, 95 சதவீதம் சரி செய்யப்பட்டுள்ளது . 18,780 பேர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர் . 343 இடங்களில் தண்ணீர் அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது .3,000 தூய்மை பணியாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஒரு சில பகுதிகளில் மின் இணைப்பை சரி செய்ய பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன . தாழ்வான பகுதிகளில் தண்ணீரை முழுமையாக வெளியேற்றிய பிறகு, மின் இணைப்பு சீராக்கப்படும்.

சென்னையில் 22 சுரங்கப் பாதைகளில், 20 திறக்கப்பட்டுள்ளது. இன்று இரவுக்குள் மீதமுள்ள பாதைகள் சரிசெய்யப்படும் . நடமாடும் பால், காய்கறி கடைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று 50 வாகனங்களும், நாளை 150 வாகனங்களும் இயக்கப்படும்.

முன்பு தண்ணீர் தேங்கும் பல இடங்களில் தற்போது தண்ணீர் தேங்கும் நிலை இல்லை. மத்திய அரசிடம் வெள்ள நிவாரணமாக ரூ.5,060 கோடி கேட்டுள்ளோம். விரைவில் மத்திய குழு வரும் என எதிர்பார்க்கிறோம். மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது என்றார்.


Next Story