2023-24-ம் நிதி ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்


2023-24-ம் நிதி ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்
x

2023-24-ம் நிதி ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்கிறார். கவர்ச்சிகரமான திட்டங்கள் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை

குறுகிய காலம்

சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் கடைசியாக 2016-ம் ஆண்டு தாக்கலானது. அதன் பிறகு உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் நேரடி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நிலையில், மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டு, சென்னை மேயராக பிரியா தேர்வு செய்யப்பட்டார். மேயராக பதவியேற்ற குறுகிய காலகட்டத்திலேயே 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மேயர் பிரியா தாக்கல் செய்தார். கடந்த பட்ஜெட்டில் காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவுபடுத்துதல், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட 67 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இவற்றில் பெரும்பாலான பணிகள் செய்து முடிக்கப்பட்டு விட்டன. ஒரு சில பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

2-வது பட்ஜெட்

இந்த நிலையில், 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. சென்னை ரிப்பன் மாளிகை கட்டிடத்தின் கூட்ட அரங்கில் பட்ஜெட் கூட்டம் காலை 10 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் மேயர் பிரியா பட்ஜெட் அறிவிப்புகளை வெளியிடுவார். மேயர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொறுப்பேற்று ஓராண்டு முடிவடைந்துள்ளதால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த முறை கூடுதலான அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, 70-க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் இடம்பெற உள்ளதாக தெரிகிறது. சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்று மேயர் பிரியா தாக்கல் செய்யும் 2-வது பட்ஜெட் இதுவாகும்.

இந்த முறை பட்ஜெட்டில் கவுன்சிலர் வார்டு வளர்ச்சி நிதி உயர்வு, சென்னை மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்ட பள்ளிகளின் தரத்தை உயர்த்துதல், மாணவர்களுக்கு திறன் வளர்ச்சி திட்டங்கள், சிங்கார சென்னை 2.0 திட்டப்பணிகள், மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மைத் துறைக்கு புதிய திட்டங்கள், துறை ரீதியாக காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இன்றைய கூட்டம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடுவதோடு நிறைவுபெறும்.

நிதி பற்றாக்குறை

இதைத்தொடர்ந்து, நாளை (28-ந்தேதி) பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். கட்சி வாரியாக கவுன்சிலர்கள் விவாதத்தின் மீது பேசுவார்கள். இறுதியில் மேயர் பிரியா பதிலுரை நிகழ்த்துவார். கூட்டத்தின் இறுதியில் 2023-24-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்கப்படும். கடந்த ஒரு வருடத்தில் சென்னை மாநகராட்சிக்கு நிலுவையில் இருந்த சொத்து வரி, நீண்டகால வாடகைகள் போன்றவை வசூலிக்கப்பட்டு உள்ளதால் நிதி ஆதாரம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், 2022-23-ம் ஆண்டைக்காட்டிலும் இந்த நிதியாண்டில் நிதி பற்றாக்குறை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Next Story