சாலை விபத்தில் பெற்றோரை இழந்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு பசுமை வீடு - கலெக்டர் கார்மேகம் ஆணை


சாலை விபத்தில் பெற்றோரை இழந்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு பசுமை வீடு - கலெக்டர் கார்மேகம் ஆணை
x
தினத்தந்தி 4 July 2023 1:02 AM IST (Updated: 4 July 2023 3:34 PM IST)
t-max-icont-min-icon

சாலை விபத்தில் பெற்றோரை இழந்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு பசுமை வீடுகட்ட கலெக்டர் கார்மேகம் ஆணையை வழங்கினார்

சேலம்

சேலம்

சாலை விபத்தில் பெற்றோரை இழந்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு பசுமை வீடு கட்டுவதற்கான ஆணையை மாவட்ட கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

மாற்றுத்திறனாளி மாணவி

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கல்பாரப்பட்டியை சேர்ந்தவர் அமுதா. மாற்றுத்திறனாளி மாணவியான இவருடைய பெற்றோர் சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தனர். இதையடுத்து, அவர் தனக்கு உதவி செய்யுமாறு மாவட்ட கலெக்டர் கார்மேகத்திடம் மனு அளித்தார்.

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாணவி அமுதாவுக்கு தேவையான உதவிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாணவி அமுதாவுக்கு அரசின் சார்பில் முதல்-அமைச்சரின் பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 48 ஆயிரத்து 460 மதிப்பிலான வீடு கட்டி வழங்குவதற்குரிய ஆணையை கலெக்டர் கார்மேகம் மாணவிக்கு வழங்கினார். அப்போது அவர் வீடு கட்டும் பணிகள் அரசின் சார்பில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் உடனடியாக தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

நடவடிக்கை

இதுகுறித்து கலெக்டர்கார்மேகம் கூறும் போது,' விபத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் மாணவி அமுதாவுக்கு கல்லூரியில் மாணவர் சேர்க்கை, கல்வி செலவுகள் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்டவைகளை தமிழ்நாடு அரசின் சார்பில் சேலம் மாவட்ட நிர்வாகம் ஏற்று அவரின் வாழ்வின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story