'மாணவர் மனசு' என்ற பெயரில் புகார் பெட்டி அமைப்பு


மாணவர் மனசு என்ற பெயரில் புகார் பெட்டி அமைப்பு
x

கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் ‘மாணவர் மனசு' என்ற பெயரில் புகார் பெட்டி அமைக்கப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி

சமீபகாலமாக பள்ளிக்கூடங்களில் பெண் குழந்தைகள்மீது பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்கள் நிறைய வருகின்றன. இதையடுத்து பள்ளிக்கூடங்களில் ஒரு குழுஅமைக்க கோர்ட்டு பரிந்துரைத்திருந்ததுடன், மேலும், மாணவர்கள் தங்கள் புகாரை தெரிவிப்பதற்கு ஒரு புகார் பெட்டியும் வைக்கவேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை செயல்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித்துறை 31 ஆயிரத்து 214 அரசு இடைநிலைப்பள்ளிக்கூடங்களிலும், 6 ஆயிரத்து 177 மேல்நிலைப் பள்ளிக்கூடங்களிலும் புகார் பெட்டி வைப்பதற்காக ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் ரூ.1,000 நிதி ஒதுக்கியிருக்கிறது.

இதுதவிர அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும் தலைமை ஆசிரியர் தலைமையில் 2 ஆசிரியர்கள், ஒரு பெற்றோர் ஆசிரியர்கழக உறுப்பினர், ஒரு ஆசிரியரல்லாத பணியாளர், ஒரு நிர்வாகப்பணியாளர், ஒரு வெளிஉறுப்பினர் (விருப்பப்பட்டால்) ஆகியோர் கொண்ட மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 'மாணவர் மனசு' என்ற பெயரில் புகார் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அங்கு விழிப்புணர்வு பதாகைகளும், மாணவ-மாணவிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் கூறுகையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் உத்தரவுபடி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதாக அமைந்துள்ளது. 15 நாட்களுக்கு ஒருமுறை புகார்பெட்டியை மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் திறந்து, அதில் இருக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.


Next Story