குறைதீர்க்கும் நாள் கூட்டம்: புதிய வீடுகள் கட்டி தரக்கோரி பொதுமக்கள் மனு


குறைதீர்க்கும் நாள் கூட்டம்:  புதிய வீடுகள் கட்டி தரக்கோரி பொதுமக்கள் மனு
x

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் புதிய வீடுகள் கட்டி தரக்கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.

கரூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 531 மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளிடம் 47 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 99 பயனாளிகளுக்கு ரூ.66 லட்சத்து 77 ஆயிரம் 935 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிலத்தடி நீர் மாசடைகிறது

கூட்டத்தில் பிள்ளபாளையம் மற்றும் காலனி ஊர்பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- பிள்ளபாளையம் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக ஒரு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கிருந்து வெளிேயறும் தேங்காய் நார் கழிவுகளால் நிலம் மற்றும் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது.

இதனால் அந்த நீரை உபயோகப்படுத்த முடியவில்லை. இதற்கிடையே அப்பகுதியில் புதிதாக ஒரு தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதனால் விவசாயம் அடியோடு பாதிக்கப்படும். இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

வீடு கட்டித்தர வேண்டும்

பசுபதிபாளையம், கொளந்தானூர் அடுக்குமாடி மக்கள் நல்வாழ்வு நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு குடிசை பகுதி மாற்று வாரியம் மூலம் 112 வீடுகள் கட்டி கொடுத்து அங்கு குடியிருந்து வந்தோம். இந்த வீடுகள் அனைத்தும் பழுதடைந்த காரணத்தால் எங்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

பின்னர் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் புதிய வீடுகள் கட்டி தருவதாக உறுதியளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் குடும்ப அட்டைகளை உங்களிடம் ஒப்படைத்து விடுவோம். எனவே விரைவில் வீடுகள் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

10 சதவீத இடஒதுக்கீடு

தமிழர் தேசம் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- சமூக மற்றும் கல்வி நிலையில் பின்தங்கியுள்ள வலையர், அம்பலகாரர், முத்துராஜா, முத்திரையர், சேர்வை என்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் முத்தரையர் சமூகத்திற்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும். வலையர் புனரமைப்பு வாரியத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story