17 பவுன் நகை திருடிய மளிகை கடைக்காரர் கைது


17 பவுன் நகை திருடிய மளிகை கடைக்காரர் கைது
x

கடலூரில் ஓடும் பஸ்சில் நெய்வேலி முதியவரிடம் 17 பவுன் நகை திருடிய மளிகை கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

ஓடும் பஸ்சில் திருட்டு

நெய்வேலி அருகே மந்தாரக்குப்பம் ஏ.குறவன்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுப்புராயலு (வயது 60). இவர் கடந்த 30.5.2023 அன்று புதுச்சேரியில் உள்ள உறவினர் திருமணத்திற்காக குடும்பத்துடன் தனியார் பஸ்சில் ஏறி கடலூர் வந்தார். பின்னர் கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். அதன்பிறகு இருக்கைக்கு மேல் லக்கேஜ் வைக்கும் இடத்தில் தான் கொண்டு வந்த பையை சுப்புராயலு வைத்தார்.

அந்த பஸ் அண்ணா பாலம் அருகில் உள்ள சிக்னல் வந்த போது, தன்னுடைய பையை பார்த்தார். அதை காணவில்லை. அந்த பையில் இருந்த 17 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் பணத்தை காணவில்லை. இவற்றை ஒடும் பஸ்சில் யாரோ மர்ம நபர் திருடிச்சென்று விட்டார். இதன் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும். இது பற்றி சுப்புராயலு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.

ரோந்துப்பணி

மேலும் பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். இந்நிலையில் நேற்று கடலூர் ஜவான்பவன் அருகில் உள்ள ஜவுளிக்கடை அருகில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் கணபதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார், ஏட்டுகள் ரமேஷ்குமார், சின்னராஜ் மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அந்த வழியாக விழுப்புரம் மாவட்டம் ராதாபுரம் வெட்டுக்காடு பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 55) என்பவர் நடந்து வந்தார். அவரை வழிமறித்து விசாரித்ததில், அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியையும் வைத்து, அவரிடம் விசாரித்தனர். விசாரணையில், அவர் தான் சுப்புராயலு பையில் இருந்து நகை, பணத்தை திருடிச்சென்றதை ஏற்றுக்கொண்டார்.

கைது

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பெருமாள் ஊரில் மளிகைக்கடை வைத்திருந்ததாகவும், அதில் நஷ்டம் அடைந்ததால், அதை மூடி விட்டு திருட்டு தொழிலில் ஈடுபட ஆரம்பித்ததாகவும் தெரிவித்தார். அதையடுத்து அவர் பல்வேறு இடங்களில் மறைத்து வைத்திருந்த 8¼ பவுன் நகையை போலீசார் மீட்டனர். மீதி நகையை விற்பனை செய்து செலவு செய்துவிட்டதாக கூறினார். இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.


Next Story