ஈரோட்டில் மளிகை பொருட்கள் விலை உயர்வு; இல்லத்தரசிகள் கலக்கம்


ஈரோட்டில் மளிகை பொருட்கள் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

ஈரோடு

ஈரோடு

ஈரோட்டில் மளிகை பொருட்கள் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

விலை உயர்வு

ஈரோடு மாவட்டத்துக்கு கர்நாடகா, மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், அரியானா, ஆந்திரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து துவரம் பருப்பு, கடலை பருப்பு, உளுந்து உள்ளிட்ட மளிகை பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இந்த ஆண்டு பருப்பு வகைகள் விளைச்சல் குறைவாக உள்ளதாலும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மொத்தமாக பருப்பு வகைகளை கொள்முதல் செய்து இருப்பு வைத்துள்ளதாலும் பருப்பு வகைகள் கடந்த 2 மாதங்களில் கடுமையாக விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரூ.88-க்கு விற்பனையான ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ரூ.32 விலை உயர்ந்து நேற்று ரூ.120-க்கும், ரூ.169-க்கு விற்பனையான கடலை எண்ணெய் ரூ.71 விலை உயர்ந்து ரூ.240-க்கும் விற்பனை ஆனது.

இல்லத்தரசிகள் கலக்கம்

இதேபோல் பூண்டும் கிலோவுக்கு ரூ.35 வரை விலை உயர்ந்துள்ளது. மேலும் ரூ.590-க்கு விற்பனையான ஒரு கிலோ சீரகம் ரூ.110 விலை அதிகரித்து ரூ.800-க்கும், ரூ.103-க்கு விற்பனையான ஒரு கிலோ தோசை புளி ரூ.27 விலை உயர்ந்து ரூ.130-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் அனைத்து மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

ஈரோட்டில் மளிகை கடைகளில் மொத்த விற்பனையில் மளிகை பொருட்களின் விலை கிலோவில் வருமாறு:-

சர்க்கரை -ரூ.39, துவரம் பருப்பு -ரூ.153, கடலை பருப்பு ரூ.70, பாசி பருப்பு -ரூ.108, பச்சை பட்டாணி -ரூ.85, குண்டு உளுந்து -ரூ.120, உடைத்த உளுந்து -ரூ.110, நாட்டு பயறு -ரூ.128, தட்ட பயறு -ரூ.110, அவரை பருப்பு -ரூ.200, வெள்ளை சுண்டல் ரூ.150, கருப்பு சுண்டல் -ரூ.90, பொட்டு கடலை -ரூ.80, தோசை புளி -ரூ.130, ஜவ்வரிசி -ரூ.68, குண்டு வெல்லம் -ரூ.48, பூண்டு -ரூ.180, காய்ந்த மிளகாய் -ரூ.260, கடுகு -ரூ.75, சீரகம் - ரூ.800. சமையல் எண்ணெய் -ரூ.120 (ஒரு லிட்டர்), கடலை எண்ணெய் -ரூ.240.


Next Story