அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வீடு கட்ட அடிக்கல் நாட்டு விழா


அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வீடு கட்ட அடிக்கல் நாட்டு விழா
x

அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த சிறுமி தானியாவுக்கு ரூ.10 லட்சத்தில் புதிய வீடு கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா் கைத்தறித் துறை அமைச்சா்.

திருவள்ளூர்

ஆவடி அடுத்த மோரை பகுதியை சேர்ந்த ஸ்ரீபன்ராஜ்- சௌபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள் தானியா அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். மகளின் முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவிடுமாறு பெற்றோர்கள் முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தானியாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி சிறுமி தானியாவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து சிறுமி தானியா குடும்பத்திற்கு திருநின்றவூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் ரூ.1½ லட்சத்தில் நிலத்திற்கான வீட்டு மனை பட்டா மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டிக் கொள்வதற்கான அனுமதி ஆணையும் முதல்-அமைச்சரால் வழங்கப்பட்டது. இந்நிலையில் திருநின்றவூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் சிறுமி தானியாவுக்கு சுமார் 600 சதுர அடியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மானிய தொகை ரூ.2.10 லட்சம் உட்பட ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் வீடு கட்டுவதற்கு ஆணையை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ஏம்.எல்.ஏ சா.மு.நாசர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் முன்னிலையில் வழங்கி கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார்.


Next Story