நிலக்கடலை விற்பனை மும்முரம்


நிலக்கடலை விற்பனை மும்முரம்
x

நிலக்கடலை விற்பனை மும்முரம்

திருவாரூர்

திருவாரூரில் நிலக்கடலை விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. 2 படி நிலக்கடலை ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

புரதச்சத்து அதிகம்

கடலை, மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை என பல்வேறு பெயர்களில் தமிழகத்தில் அழைக்கப்படும் உணவுப்பொருள் நிலக்கடலை. பீன்ஸ், பட்டாணி போன்ற தாவர வகையை சேர்ந்தது தான் நிலக்கடலை. ஆனால் இதன் சத்தினை கணக்கில் கொண்டு கொட்டை வகைகளில் சேர்த்துள்ளனர். பூமிக்கடியில் தலை வைத்து வெளியே இலை விடுகிற தாவரம் நிலக்கடலை. இதன் இலைகள் செடியில் பழுத்து மஞ்சள் நிறமடைந்த 2 மாதங்களில் நிலக்கடலை முற்றி கிடைக்கிறது.

இறைச்சி, காய்கறிகளை விட நிலக்கடலையில் புரதச்சத்து அதிகம். மாறிவிட்ட வாழ்க்கை முறையால், பன்னாட்டு உணவு கம்பெனிகளின் கடைவிரிப்பால் நம் மரபுசார்ந்த உணவுப்பொருளான நிலக்கடலையை கைவிட்டவர்கள் நம்மில் அதிகம் என்றால் அது மிகை இல்லை. பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில் தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நிலக்கடலை விற்பனை மும்முரம்

நிலக்கடலை மூலம் சுவையான கடலை மிட்டாய், கடலை எண்ணெய், சட்னி, மாடுகளுக்கு உணவாகவும் பிண்ணாக்கு ஆகியவை கிடைக்கின்றன. இதில் குறிப்பாக தினந்தோறும் நாம் உபயோகப்படுத்த கூடிய உணவு பொருட்களில் கட்டாயம் கடலை எண்ணெய் இடம் பெறுவது நிச்சயம். கடலை எண்ணெயில் செய்யப்படும் பதார்த்தங்கள் சுவையாகவும், கெடாமலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

திருவாரூரில் நிலக்கடலை விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். 2 படி நிலக்கடலை ரூ.60-க்கு விற்பனையாகிறது. கிலோ ரூ.80-க்கு விற்பனையாகிறது.

லாபத்தை எதிர்பார்க்க முடிவதில்லை

திருவாரூரில் வாளவாய்க்கால் பகுதி 4 வீதிகளிலும், திருவாரூர் கும்பகோணம் சாலை, துர்காலயா சாலை உள்ளிட்ட இடங்களில் வியாபாரிகள் தள்ளுவண்டிகள் மற்றும் தரைக்கடை மூலம் நிலக்கடலை விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், நிலக்கடலையை பரவை பகுதியில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். முன்பு மார்க்கெட், மளிகை கடைகளில் சென்று தான் நிலக்கடலைகளை வாங்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது பொதுமக்களை தேடி நாங்களே சாலையோரங்களில், தெருக்களில் விற்பனை செய்வதால் பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர். வாகன வாடகை, ஆட்கள் கூலி ஆகிய செலவுகள் என விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்தாலும் சம்பளத்திற்கு மட்டுமே கிடைக்கிறது. லாபத்தை எதிர்பாக்க முடிவதில்லை என்றனர்.


Next Story