குரூப் 2 தேர்வு தாமதமாக தொடங்கியது ஏன்...? டிஎன்பிஎஸ்சி விளக்கம்


குரூப் 2 தேர்வு தாமதமாக தொடங்கியது ஏன்...? டிஎன்பிஎஸ்சி விளக்கம்
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 PM GMT (Updated: 25 Feb 2023 12:15 PM GMT)

குரூப் 2 தேர்வு வினாத்தாள், விடைத்தாள் வழங்குவதில் தாமதம்.. தேர்வர்களின் பதிவு எண்கள் மாறியதால் குழப்பம் ஏற்பட்டது.

சென்னை

குரூப் 2 முதன்மை எழுத்து தேர்வில், வினாத்தாள் மற்றும் விடைத்தாளில் பதிவு எண்கள் மாறி வந்ததால், முற்பகல் தேர்வு தாமதமாக தொடங்கிய நிலையில், அதனை ஈடு செய்யும் விதமாக, பிற்பகல் தேர்வு இரண்டரை மணிக்கு தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்ட தேர்வு மையங்களில், 55 ஆயிரத்து 71 பேர் குரூப் 2 தேர்வு எழுதி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை, மதுரை, ஈரோடு உட்பட பல மாவட்டங்களில், காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய தமிழ்மொழி தகுதி தேர்வு மிகவும் தாமதமாக தொடங்கியது.

இந்த நிலையில், தேர்வுகள் தாமதமாகத் தொடங்கியது ஏன் என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

அதாவது, வருகைப்பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாள்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் காரணமாக காலை வினாத்தாள்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இதனை ஈடுசெய்யும் பொருட்டு தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்று முடிந்ததுடன், பிற்பகல் தேர்வு நேரம், 2.30 மணிக்குத் துவங்கி 5.30 மணி வரை நடைபெறும் வகையில் மறுவரையறை செய்யப்பட்டது.

அதன்படி, பிற்பகலில் தேர்வானது துவங்கப்பட்டு, தேர்வு மையங்களில் சீராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.


Next Story