22 மையங்களில் குரூப்-4 தேர்வு தொடங்கியது


22 மையங்களில் குரூப்-4 தேர்வு தொடங்கியது
x

தர்மபுரி மாவட்டத்தில் 22 மையங்களில் குரூப்-4 எழுத்து தேர்வு தொடங்கியது. முதல் நாளில் 2,358 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் 22 மையங்களில் குரூப்-4 எழுத்து தேர்வு தொடங்கியது. முதல் நாளில் 2,358 பேர் தேர்வு எழுத வரவில்லை.

குரூப்-4 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் செயல் அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-4 எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. முற்பகல் மற்றும் பிற்பகல் என இருவேளைகளிலும் இந்த தேர்வு நடைபெற்றது. இதேபோன்று தர்மபுரி மாவட்டத்திலும் 2 நாட்கள் நடைபெறும் இந்த எழுத்து தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 22 மையங்களில் இந்த எழுத்து தேர்வு நேற்று தொடங்கியது. அனைத்து தேர்வு மையங்களிலும் பஸ்கள் நின்று செல்லும் வகையில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மையங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற எழுத்து தேர்வு மையத்தில் கலெக்டர் சாந்தி ஆய்வு செய்தார். தேர்வு மையங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என்று தேர்வு மைய கண்காணிப்பாளர்களிடம் அவர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது தாசில்தார் ராஜராஜன் உடன் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற எழுத்து தேர்வில் மொத்தம் 2,956 பேர் தேர்வு எழுதுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இதில் 1,787 தேர்வர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். 1,169 பேர் தேர்வு எழுத வரவில்லை. மேலும், நேற்று மாலையில் நடைபெற்ற தேர்வினை 1,767 பேர் எழுதினர். 1,189 பேர் தேர்வு எழுத வரவில்லை. நேற்று நடைபெற்ற தேர்வில் மொத்தம் 2,358 பேர் தேர்வு எழுத வரவில்லை. தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) எழுத்து தேர்வு நடைபெறுகிறது.


Next Story