225 மையங்களில் நடந்த குரூப்-4 தேர்வு


225 மையங்களில் நடந்த குரூப்-4 தேர்வு
x

திண்டுக்கல் மாவட்டத்தில் 225 மையங்களில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 54 ஆயிரத்து 47 பேர் எழுதினர்.

திண்டுக்கல்

குரூப்-4 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் குரூப்-4 தேர்வு தமிழகம் முழுவதும் நடந்தது. அதன்படி திண்டுக்கல்லில் 26 ஆயிரத்து 552 பேர், ஆத்தூரில் 3,820 பேர், குஜிலியம்பாறையில் 1,411 பேர், கொடைக்கானலில் 1116 பேர், நத்தத்தில் 2,916 பேர், நிலக்கோட்டையில் 9,186 பேர், ஒட்டன்சத்திரத்தில் 4,208 பேர், பழனியில் 11,134 பேர், வேடசந்தூரில் 3,975 பேர் என மாவட்டம் முழுவதும் 64 ஆயிரத்து 318 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

இவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் 225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து காலை 8 மணியில் இருந்தே தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் வரத்தொடங்கினர். காலை 8.30 மணி முதல் 9 மணி வரை தேர்வு மையங்களுக்குள் செல்ல தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு வந்தவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. வேடசந்தூரில் தேர்வு மையங்களுக்கு தாமதமாக சென்ற 15 பேருக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

54 ஆயிரத்து 47 பேர்

அதன் பின்னர் காலை 9.15 மணி அளவில் தொடங்கிய தேர்வு மதியம் 12.45 மணி வரை நடந்தது. மாவட்டம் முழுவதும் நடந்த தேர்வை 54 ஆயிரத்து 47 பேர் எழுதினர். 10 ஆயிரத்து 271 பேர் தேர்வு எழுத வரவில்லை. முன்னதாக தேர்வு மையங்களுக்கு வந்தவர்களில் கைக்குழந்தைகளுடன் வந்த பெண்கள், கர்ப்பிணிகள் ஆகியோரும் இடம்பெற்று இருந்தனர். அவர்களுக்கு துணையாக வந்த உறவினர்கள், பெற்றோர் தேர்வு மையங்களுக்கு வெளியே காத்திருந்தனர். இதில் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் பெண் குழந்தையுடன் வயதான தம்பதிகள் காத்திருந்தனர். அவர்களின் மகள் தேர்வு எழுத சென்றிருந்தார். தேர்வு முடிந்ததும் வேக, வேகமாக தேர்வறையைவிட்டு வெளியே ஓடி வந்த அந்த பெண் ஓடிச்சென்று தனது மகளை வாரி அணைத்து உச்சிமுகர்த்து முத்தமிட்டார். நீண்ட நேரமாக தன்னை தவிக்க விட்டு சென்ற தாய் திரும்ப வந்த மகிழ்ச்சியில் அந்த குழந்தையும் மந்திர புன்னகையுடன் தாயை கட்டி அணைத்தது. அதே போல் கைக்குழந்தைகளுடன் காத்திருந்த கணவர், தேர்வெழுத சென்ற அக்காளுக்காக காத்திருந்த தம்பி என பலர் தேர்வு முடிந்து வந்தவர்களுக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்து வீட்டுக்கு அழைத்துச்சென்றனர்.

கலெக்டர் ஆய்வு

தேர்வு தொடங்கிய சிறிது நேரத்தில் திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை கலெக்டர் விசாகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு விதிமுறைகள் மற்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வு நடக்கிறதா? என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதேபோல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் முனியநாதன், பழனி அருகே புளியம்பட்டி பகுதியில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்துக்கு சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு போதிய வசதிகள் செய்யப்பட்டு உள்ளனவா? என்று ஆய்வு செய்தார்.

மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட 20 பறக்கும் படையினர், 64 நடமாடும் கண்காணிப்பு குழுவினர் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.


Next Story