குரூப்-4 தேர்வை 50 ஆயிரத்து 152 பேர் எழுதினர்


குரூப்-4 தேர்வை 50 ஆயிரத்து 152 பேர் எழுதினர்
x

நெல்லை மாவட்டத்தில் 230 மையங்களில் நடந்த குரூப்-4 தேர்வை 50 ஆயிரத்து 152 பேர் எழுதினர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் 230 மையங்களில் நடந்த குரூப்-4 தேர்வை 50 ஆயிரத்து 152 பேர் எழுதினர்.

குரூப்-4 தேர்வு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது.

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, மானூர், அம்பை, சேரன்மாதேவி, நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம் ஆகிய தாலுகாக்களில் 191 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 230 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. இந்த தேர்வை 61 ஆயிரத்து 86 பேர் எழுதுவதற்கு விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் 50 ஆயிரத்து 152 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 10 ஆயிரத்து 934 பேர் தேர்வு எழுதவில்லை.

இந்த தேர்வு சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து தேர்வை சுமுகமாக நடத்த ஒவ்வொரு தாலுகாவிற்கும் தலா ஒரு உதவி கலெக்டர் வீதம், 8 உதவி கலெக்டர்களும், தேர்வு எழுத வந்தவர்களை கண்காணிக்க 230 ஆய்வு அலுவலர்களும், 11 பறக்கும்படை அலுவலர்களும், தேர்வு பணிகள் மேற்கொள்ள தாசில்தார், துணை தாசில்தார் நிலையில் 59 சுற்றுக்குழு அலுவலர்களும், தேர்வு நடவடிக்கைகளை பதிவு செய்திடும் வகையில் 238 வீடியோ கிராபர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் தேர்வை மும்முரமாக கண்காணித்து வந்தனர்.

வாக்குவாதம்

தேர்வு எழுத காலதாமதமாக வந்த நபர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் தங்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க வேண்டுமென்று கூறினார்கள். அதற்கு அனுமதி மறுத்ததால் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு வந்த நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகரிடம் முறையிட்டனர். ஆனால் நேரம் ஆகிவிட்டதால் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்று அவர் கூறிவிட்டார். இதனால் அவர்கள் தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தேர்வு எழுத வந்த பெண்கள் தங்கள் கைக்குழந்தையுடன் வந்திருந்தனர். அவர்களது குழந்தைகளை தங்களுடைய தாய் மற்றும் மாமியாரிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுத சென்றனர். பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் குழந்தைகளை தொட்டில் கட்டி அதில் தூங்க வைத்திருந்தனர்.

பாளையங்கோட்டை ராஜகோபாலநகரை சேர்ந்த சிவராஜா மனைவி ஜெனிபர் என்பவர் பாளையங்கோட்டை தனியார் கல்லூரியில் அமைக்கபட்டிருந்த மையத்தில் தேர்வு எழுத தனது 10 மாத கைக்குழந்தையுடன் வந்தார். பின்னர் தனது கணவரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு தேர்வு அறைக்குச்சென்றார். அப்போது தனது குழந்தைக்கு உணவு ஊட்டி சிவராஜா கவனித்துக்கொண்டார்.

போலீஸ் பாதுகாப்பு

இந்த தேர்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் தேர்வு மையத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை கலெக்டர் விஷ்ணு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் உள்ள 191 இடங்களில் அமைந்துள்ள 230 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. இந்த தேர்வை கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிளாஸ்டிக் பொருட்கள்

நெல்லை மாவட்டத்தில் நெல்லை நீர்வளம் சார்பில் "தூய பொருநை நெல்லைக்கு பெருமை" என்ற தலைப்பில் தாமிரபரணி கரையோரம் 1200 நீர்நிலைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றங்கரையோரம் நடக்கும் திருவிழா முக்கிய நிகழ்வுகளில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசையன்று சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்காக சேரன்மாதேவி உதவி கலெக்டர் மற்றும் களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆகியோர் தலைமையில் வருவாய்துறை, வனத்துறை, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ஏற்கனவே சோதனை சாவடி அமைக்கப்பட்டிருந்தாலும் கூடுதலாக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வனத்துறை, காவல்துறையினர் சோதனை பணியில் ஈடுபட உள்ளனர். எனவே ஆடி அமாவாசைக்கு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர், நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், பாளையங்கோட்டை தாசில்தார் ஆவுடையப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story