தேனியில் 6 மையங்களில் குரூப்-7 தேர்வு: 48 சதவீதம் பேர் எழுத வரவில்லை


தேனியில் 6 மையங்களில் குரூப்-7 தேர்வு:  48 சதவீதம் பேர் எழுத வரவில்லை
x

தேனியில் 6 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-7 தேர்வு நடந்தது. தேர்வு எழுத அனுமதி பெற்றவர்களில் 48 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை

தேனி

குரூப்-7 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை-3 பதவிக்கான குரூப்-7 'பி' தேர்வு இன்று நடந்தது. தேனி மாவட்டத்தில் 6 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடந்தது. காலை மற்றும் பிற்பகல் என 2 நிலைகளில் தேர்வு நடந்தது.

இந்த தேர்வை எழுத 1,662 பேர் அனுமதி பெற்று இருந்தனர். தேர்வு மையங்களுக்கு காலை 8 மணிக்கே தேர்வர்கள் வரத்தொடங்கினர். காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கியது. விண்ணப்பித்து தேர்வு எழுத அனுமதி பெற்றவர்களில் பலர் தேர்வு எழுத வரவில்லை. இதனால் தேர்வு அறைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கலெக்டர் ஆய்வு

ஒவ்வொரு அறைகளிலும் ஒதுக்கீடு செய்த எண்ணிக்கையை விட குறைவான எண்ணிக்கையில் தேர்வு எழுதினர். மொத்தம் 862 பேர் மட்டுமே இந்த தேர்வை எழுதினர். அது, 51.86 சதவீதம் ஆகும். அனுமதி பெற்றவர்களில் 800 பேர் தேர்வு எழுதவில்லை. அதாவது, 48.14 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை. தேனியில் உள்ள தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த தேர்வுக்காக 6 முதன்மை கண்காணிப்பாளர்கள், 84 அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றினர். வினாத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டன. தேர்வு முடிந்தவுடன் பலத்த பாதுகாப்புடன் விடைத்தாள்கள் எடுத்துச் செல்லப்பட்டன. தேர்வு நடைமுறைகள் வீடியோ கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டது.


Next Story