வெள்ளைப்பூண்டு செடிகளில் வளர்ச்சி அதிகரிப்பு
கோத்தகிரி பகுதியில் வெள்ளைப்பூண்டு செடிகளில் வளர்ச்சி அதிகரித்து உள்ளது. இதனால் விளைச்சல் கூடும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
கோத்தகிரி
கோத்தகிரி பகுதியில் வெள்ளைப்பூண்டு செடிகளில் வளர்ச்சி அதிகரித்து உள்ளது. இதனால் விளைச்சல் கூடும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
வெள்ளைப்பூண்டு சாகுபடி
நீலகிரியில் விளையும் வெள்ளைப்பூண்டு அதிக காரத்தன்மை கொண்டதாகவும், மருத்துவ குணம் கொண்டதுமாகவும் இருப்பதால் எப்பொழுதும் சந்தையில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதன் காரணமாக கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளான கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, மிளிதேன் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் முதல் போக விவசாயமாக கடந்த மாத தொடக்கத்தில் தங்களது தோட்டங்களில் வெள்ளைப்பூண்டுகளை ஆர்வத்துடன் பயிரிட்டனர்.
தற்போது கோத்தகிரி பகுதிகளில் மழை பெய்யாவிட்டாலும், விவசாயிகள் தங்கள் தோட்டங்களுக்கு ஸ்பிரிங்ளர் மூலம் தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சி, பராமரித்து வருகின்றனர். இதனால் பூண்டு செடிகள் செழித்து வளர தொடங்கி உள்ளன. இதன் காரணமாக விளைச்சல் கூடும் என்று விவசாயிகள் நம்பிக்கையாக உள்ளனர்.
விதைக்காக கொள்முதல்
இதுகுறித்து பூண்டு பயிரிட்டுள்ள கேத்தி பாலாடாவை சேர்ந்த விவசாயி சிவகுமார் கூறியதாவது:-
முதல் போகத்தில் அறுவடை செய்யப்படும் பூண்டு சமையல் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 2-ம் போகத்தில் அறுவடை செய்யும் பூண்டு விதைக்காக பயன்படுத்தப்படுகிறது. விதைக்காக நீலகிரி பூண்டுகளே பெரிதும் பயன்படுத்தப்படுவதால், 2-ம் போகத்தில் அறுவடை செய்யப்படும் பூண்டுகளை இந்தியா முழுவதிலும் இருந்து வந்து விவசாயிகள் வாங்கி செல்கின்றனர்.
ஆனால் பூண்டுக்கு என நிரந்தரமான கொள்முதல் விலை கிடைப்பதில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூண்டு கிலோவுக்கு வெறும் 30 ரூபாய் மட்டுமே விலை கிடைத்தது. இதனால் பூண்டு பயிரிட்ட விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் கடந்த சில மாதங்களாக தொடர் மழை பெய்ததால், நிலத்தை டிராக்டர் எந்திரம் மூலம் உழுது பதப்படுத்த முடியவில்லை.
விலை உயரும்
கடந்த மாதம் நிலத்தை பதப்படுத்தி, மழை இல்லாவிட்டாலும் ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சி மண்ணை இலகுவாக்கி, சால்களை அமைத்து, பூண்டு விதைகளை விதைத்தோம். மேலும் இயற்கை உரத்தை இட்டு, தினமும் தண்ணீர் பாய்ச்சி பராமரித்து வருகிறோம். இதனால் வறட்சி நிலவினாலும் பயிர்கள் செழித்து வளர்ந்து வருகின்றன. இதன் காரணமாக விளைச்சல் அதிகரிக்கக்கூடும். வருகிற ஏப்ரல் மாத முதல் வாரத்தில் பூண்டு அறுவடைக்கு தயாராகி விடும். அதற்குள் கொள்முதல் விலை உயரக்கூடும் என நம்பியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.