நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து பாதிப்பு


நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து பாதிப்பு
x
சென்னை

குரோம்பேட்டை,

காஞ்சீபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையை சேர்ந்தவர் தாமு. இவருடைய வீட்டு திருமணத்துக்காக துணி எடுப்பதற்காக சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள பிரபல துணி கடைக்கு காரில் குடும்பத்தினருடன் வந்தார். தாமு மற்றும் குடும்பத்தினர் துணிக்கடையில் இறங்கி கொள்ள டிரைவர் ராமு, காரை பார்க்கிங் ஏரியாவில் விடுவதற்காக கொண்டு சென்றார்.

பல்லாவரம்-துரைப்பாக்கம் மேம்பாலம் அருகில் ஜி.எஸ்.டி. சாலையில் செல்லும் போது காரின் முன்பகுதியில் திடீரென கரும் புகை வந்தது. டிரைவர் ராமு, உடனடியாக காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கிவிட்டார். உடன் வந்தவரும் இறங்கிவிட்டார். அதற்குள் கார் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் பலத்த சத்தத்துடன் வெடித்தது.

இதன் காரணமாக ஜி.எஸ்.டி. சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குரோம்பேட்ைடயில் இருந்து பல்லாவரம் நோக்கி செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் தாம்பரத்தில் இருந்து தீயணைப்பு வாகனம் உடனடியாக வர முடியவில்லை. அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. பின்னர் தீயணைப்பு வீரர்கள் காரில் எரிந்த தீயை அணைத்தனர். இதுபற்றி குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story