குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தேரோட்டம்
குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தென் திருப்பதி
திருச்சி அருகே குணசீலத்தில் பிரசித்திபெற்ற பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் உள்ளது. திருப்பதிக்கு சென்று தங்களது பிரார்த்தனைகளை செலுத்த முடியாதவர்கள் அந்த பிரார்த்தனைகளை இங்கு வந்து செலுத்தி சுகம் பெறுகின்றனர். அதனால், தென் திருப்பதி என்றும் இக்கோவில் அழைக்கப்படுகிறது.
இங்கு பிரம்மோற்சவ விழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் பெருமாள் ஹனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக காலை 5:30 மணிக்கு பெருமாள் உபய நாச்சியார்களுடன் தேர்த்தட்டில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, அதிர்வேட்டுகள் ஒலிக்க 9.43 மணிக்கு தேரோட்டத்தை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வடம்பிடித்து தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் 100-க்கணக்கான பக்தர்கள் தேரின் பின்னால் பக்தி பரவசத்துடன் அங்கப்பிரதட்சணம் செய்தனர். தேரோடும் வீதி வழியாக வலம் வந்து 10.30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.
இதில் திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் அம்பிகாபதி, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் லட்சுமணன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புஷ்ப பல்லக்கு
தேேராட்டத்தையொட்டி ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பர.வாசுதேவன் தலைமையில் வாத்தலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு புண்யாகவாசனம், இரவு தீபாராதனையும் நடைபெறுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு சுவாமி புஷ்பபல்லக்கில் சேவை சாதிக்கிறார். தொடர்ந்து கண்ணாடி அறை சேவை நடைபெறுகிறது.