ஈரோடு பெரியசேமூர் செல்வ மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா; திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
ஈரோடு பெரியசேமூர் செல்வ மாரியம்மன் கோவில் குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஈரோடு பெரியசேமூர் செல்வ மாரியம்மன் கோவில் குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
செல்வ மாரியம்மன் கோவில்
ஈரோடு பெரியசேமூர் பொன்னிநகரில் பிரசித்தி பெற்ற செல்வ மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 20-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அன்று இரவு கோவிலில் கம்பம் நடப்பட்டது. 22-ந் தேதி பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று முன்தினம் காலையில் குண்டம் கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் பக்தர்கள் கோவிலுக்கு தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். அதைத்தொடர்ந்து கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவில் குண்டம் பற்ற வைக்கப்பட்டது.
குண்டம் விழா
நேற்று அதிகாலையில் பக்தர்கள் இறங்குவதற்கு வசதியாக குண்டம் தயாரானது. கோவிலின் தலைமை பூசாரி குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து, தீ மிதித்தார். அவரைத்தொடர்ந்து பூசாரிகள், பக்தர்கள் ஒவ்வொருவராக குண்டம் இறங்கினர். நீண்ட வரிசையில் காத்திருந்த திரளான பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர். பக்தர்கள் பலர் தங்களது கைக்குழந்தைகளை சுமந்தப்படி குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பக்தர்கள் அனைவரும் தீ மிதித்து முடிந்த பிறகு குண்டத்தின் மீது பக்தர்கள் மிளகு, உப்பு தூவினர். இதையடுத்து பொங்கல் விழாவும், மாவிளக்கு பூஜையும் நடந்தது. பெண்கள் பலர் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு தரிசனம் செய்தனர். விழாவையொட்டி செல்வ மாரியம்மன் ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியும், மதியம் 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது. தொடர்ந்து அம்மனின் திருவீதி உலா நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணிக்கு நடக்கும் மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.