பாரம்பரிய அடையாளமான குருத்தோலை தோரணங்கள்


பாரம்பரிய அடையாளமான குருத்தோலை தோரணங்கள்
x
திருப்பூர்


பாரம்பரிய அடையாளமாக கருதப்படும் குருத்தோலை தோரணங்கள் செய்வதற்கான ஆட்கள் குறைந்து வரும் நிலையில், இனி வரும் காலங்களில் வாசல்களில் அலங்காரத்துக்காக தொங்க விட முடியுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

இலக்கியங்கள்

பண்டைய காலம் தொட்டே நம்மோடு பயணித்து வந்தது ஓலைகள் என்பதை அனைவரும் அறிவோம். தமிழர்களின் அறிவாயுதத்தை அடையாளம் காட்டியதில் மிகப்பெரிய பங்கு ஓலைகளுக்கு உள்ளது. பல இலக்கியங்களையும் காவியங்களையும் சுமந்து வந்தவை 'ஏடு' எனப்படும் ஓலைச்சுவடிகள் தான். நெல்லை, குமரி மாவட்டங்களில் பேச்சு வழக்கில் ஓலைகளை 'இலக்கு' என்று கூறுவார்கள். இலக்கில் எழுதியதால் தான் இலக்கியங்கள் என்று பெயர் பெற்றதோ என்ற எண்ணம் தோன்றுகிறது. அத்தகைய சிறப்பு பெற்ற பனை ஓலைகளில் மட்டுமல்லாமல் தென்னை ஓலைகளைக்கொண்டும் பலவிதமான அலங்காரங்கள் செய்வது வழக்கமாகும். கொங்கு மண்டலத்தில் கோவில் திருவிழாக்கள், மங்கல நிகழ்வுகள் மட்டுமல்லாமல் அமங்கல நிகழ்வுகளிலும் தென்னை ஓலை அலங்காரங்கள் மற்றும் தோரணங்கள் இடம் பெறுகின்றன. இந்த பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் காலப்போக்கில் மாற்று தொழிலுக்கு சென்றதாலும், அடுத்த தலைமுறையினர் இந்த தொழிலில் ஆர்வம் காட்டாததாலும் தற்போது ஒரு சிலர் மட்டுமே இந்த தொழிலில் உள்ளனர்.

இளைய தலைமுறை

இதுகுறித்து தோரணம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் துங்காவி பகுதியைச் சேர்ந்த வேல்குட்டி கூறியதாவது:- முற்காலத்தில் தன் பிள்ளைகளைப்போல தென்னம்பிள்ளைகளைப்போற்றி வளர்த்து வந்தனர். இதனால் பெரும்பாலான வீடுகளின் முகப்பில் குறைந்த பட்சம் 2 தென்னை மரங்கள் நிற்கும். ஆனால் காலப்போக்கில் பக்கத்து வீட்டில் குப்பை விழுகிறது, குரும்பை உதிர்கிறது என ஏதேதோ காரணங்கள் கூறி பெரும்பாலான தென்னை மரங்கள் வெட்டப்பட்டு விட்டன. ஆனால் தென்னை மரங்களைப் போற்றும் வகையில் பாரம்பரிய நடைமுறைகளை பின்பற்றி தென்னை ஓலை, பாளை, இளநீர் போன்றவற்றைப் பயன்படுத்தி அலங்காரங்கள், தோரணங்கள் உருவாக்கும் பழக்கம் இன்றளவும் உள்ளது. பச்சை தென்னை ஓலைகளைப்பயன்படுத்தி அலங்காரம் செய்வதுடன், குருத்தோலைகளைப் பயன்படுத்தி தோரணங்கள் செய்வோம். தென்னை மரங்களில் ஏறி ஓலைகளை வெட்டி வந்து வீதியில் அமர்ந்து வேலை செய்வதற்கு இளைஞர்கள் விரும்பாததால் இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. எங்கள் தலைமுறைக்குப் பிறகு இந்த வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பார்களா என்பது சந்தேகமே. ஆனால் நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களை விட்டு விடக்கூடாது என்பதே எங்கள் எண்ணமாகும். இளைய தலைமுறையினர் விரும்பினால் இந்த கலையை கற்றுக் கொடுக்கத் தயாராகவே உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story