குட்கா விற்ற மளிகை கடைக்கு 'சீல்'

திப்பம்பட்டி கூட்ரோட்டில் குட்கா விற்ற மளிகை கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் 'சீல்' வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திப்பம்பட்டி கூட்ரோட்டில் குட்கா விற்ற மளிகை கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் 'சீல்' வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குட்கா விற்பனை
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று கலெக்டர் சாந்தி எச்சரிக்கை வைத்துள்ளார். இதை மீறி குட்கா விற்ற கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் காரிமங்கலம் தாலுகா திப்பம்பட்டி கூட்ரோடு பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஒரு மளிகை கடையில் குட்கா விற்பனை செய்வதாக புகார் வந்தது.
இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது கடையில் குட்கா பதுக்கி விற்றது தெரியவந்தது. ஏற்கனவே இந்த மளிகை கடை உரிமையாளருக்கு உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்து 2 முறை அபராதமும் விதிக்கப்பட்டதும், இதையும் மீறி தொடர்ந்து குட்கா விற்றதும் தெரிந்தது.
கடைக்கு சீல்
இதையடுத்து அந்த கடைக்கு சீல் வைக்க உணவு பாதுகாப்புத்துறை மாநில ஆணையருக்கு தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். அதன்பேரில் அந்த மளிகை கடைக்கு சீல் வைக்க மாநில ஆணையர் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா, மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், கிருஷ்ணாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கல்பனா மற்றும் போலீசார் அந்த மளிகை கடையை பூட்டி சீல் வைத்தனர். ஆணையரின் மறு உத்தரவு வரும் வரை கடை செயல்பட தடை ஆணையை கடை உரிமையாளரிடம் வழங்கப்பட்டது.






