மோட்டார் சைக்கிளில் கடத்திய 14 கிலோ குட்கா பறிமுதல்
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் கடத்திய 14 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் கடத்திய 14 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
போலீசார் சோதனை
கர்நாடகாவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக குட்கா கடத்துவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு புகார் வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து சென்று வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் பெட்டியுடன் சென்ற நபரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்த பெட்டியில் குட்கா இருப்பது தெரியவந்தது.
குட்கா பறிமுதல்
இதுதொடர்பாக அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் திருவண்ணாமலை மாவட்டம், முருகபாடியை சேர்ந்த சுரேஷ் (வயது 30) என்பது தெரியவந்தது. மேலும் அவர் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு குட்காவை கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 13.9 கிலோ குட்காவை அவர்கள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.