மினி லாரியில் கடத்திய ரூ.7½ லட்சம் குட்கா பறிமுதல்
பெங்களூருவில் இருந்து சூளகிரிக்கு மினி லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.7½ லட்சம் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
சூளகிரி
பெங்களூருவில் இருந்து சூளகிரிக்கு மினி லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.7½ லட்சம் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
வாகன சோதனை
பெங்களூருவில் இருந்து சூளகிரி வழியாக குட்கா கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் சூளகிரி போலீசார் சின்னார் பஸ் நிறுத்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
டிரைவர் கைது
அப்போது அவர் சின்னாறு பகுதியை சேர்ந்த டிரைவர் சதீஸ் (வயது29) என்பதும், பெங்களூருவில் இருந்து குட்கா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சதீசை போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.7 லட்சத்து 48 ஆயிரத்து 480 மதிப்பிலான 1,067 கிலோ குட்கா மற்றும் மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மினி லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர்.