குட்கா கடத்தி வந்த சொகுசு கார் சுற்றுலா பஸ் மீது மோதி விபத்து கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம்
செங்கம் அருகே குட்கா கடத்தி வந்த சொகுசு கார் சுற்றுலா பஸ் மீது மோதி பள்ளத்தில் பாய்ந்தது. காரில் இருந்த 200 கிலோ குட்காவை அப்படியே விட்டுவிட்டு அதனை கடத்தி வந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.
செங்கம்
செங்கம் அருகே குட்கா கடத்தி வந்த சொகுசு கார் சுற்றுலா பஸ் மீது மோதி பள்ளத்தில் பாய்ந்தது. காரில் இருந்த 200 கிலோ குட்காவை அப்படியே விட்டுவிட்டு அதனை கடத்தி வந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.
குட்கா கடத்தல் கும்பல்
தமிழகத்தில் போதைப்பொருட்களான குட்கா, புகையிலை விற்பதற்கு அரசு தடைவிதித்துள்ளது. ஆனால் போதை பொருள் கும்பல் இவற்றை பெங்களூரு உள்பட வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி கடைகள், மொத்த வியாபாரிகளுக்கு சப்ளை செய்து விற்று வருகின்றனர்.
இதனை தடுக்க அரசு உத்தரவின்பேரில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குட்கா விற்ற கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டு வருகின்றன. போலீசாரும் வாகன சோதனை நடத்தி குட்கா கடத்தி வருபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெங்களூரு பகுதியிலிருந்து குட்கா பொருட்களை கடத்திக்கொண்டு சொகுசு கார் நேற்று முன்தினம் நள்ளிரவு திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தது.
சுற்றுலா பஸ் மீது மோதல்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே நேற்று அதிகாலை கரியமங்கலம் பகுதியில் அதிவேகமாக வந்தபோது எதிரே திண்டிவனம் பகுதியிலிருந்து ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த பஸ் மீது திடீரென மோதியது.
அதன்பின்னரும் நிற்காத கார் அருகே உள்ள பள்ளத்துக்குள் பாய்ந்து நின்றது. உடனடியாக அதில் இருந்தவர்கள் கீழே இறங்கி தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர்.
தகவல் அறிந்த செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது காரை பரிசோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் 10 மூட்டைகளுக்கு மேல் இருந்தன.
பறிமுதல்
சுமார் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள 200 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்களை போலீசார் காருடன் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
தப்பி ஓடியவர்கள் யார்? எந்த பகுதியிலிருந்து யாருக்கு இவற்றை கடத்திச்சென்றனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.
நல்ல வேளையாக இந்த விபத்தில் ஒகேனக்கல் பகுதிக்கு சுற்றுலா சென்ற பஸ்சில் இருந்தவர்கள் எந்தவித பாதிப்பும் இன்றி தப்பினர்.