கோத்தகிரியில் காரில் ரூ.3 லட்சம் குட்கா கடத்தல்-ஒருவர் கைது
கோத்தகிரியில் காரில் ரூ.3 லட்சம் குட்கா கடத்தல்- ஒருவர் கைது
கோத்தகிரி
கோத்தகிரியைச் சேர்ந்த சிலர் வெளி மாநிலங்களில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்களைப் பிடிப்பதற்காக சப்- இ்ஸ்பெக்டர்கள் ரகுமான் கான், ஜார்ஜ் ஆகியோர் தலைமையில் ஏட்டு ரமேஷ், நதீம் பாஷா, முஜாஹீர், அஜித், பழனிசாமி ஆகிய போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் கண்காணித்து வந்தனர். நேற்று காலை ராம்சந்த் சதுக்கம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த காரில் ஏராளமான புகையிலைப் பாக்கெட்டுகள் மற்றும் குட்கா இருந்தது தெரிய வந்தது. அதை கொண்டு வந்தவர் கோத்தகிரி ராம்சந்த் ஆல்போர்ட்ஸ் பகுதியை சேர்ந்த நாசருதீன் (வயது 53) என்பதும், பெங்களூரில் இருந்து புகையிலைப் பொருட்களை வாங்கி, காரில் கொண்டு வந்து கோத்தகிரி பகுதியில் விற்பனை செய்ய கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்த அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.