6 இலக்க எண்களுடன் 'ஹால் மார்க்' கட்டாயம்தங்க நகை வாங்கும்போது குழப்பமா? நம்பிக்கையா?


6 இலக்க எண்களுடன் ஹால் மார்க் கட்டாயம்தங்க நகை வாங்கும்போது குழப்பமா? நம்பிக்கையா?
x

6 இலக்க எண்களுடன் ‘ஹால் மார்க்' கட்டாயம் தங்க நகை வாங்கும்போது குழப்பமா? நம்பிக்கையா? என்பது குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை பார்ப்போம்.

நாமக்கல்

தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருட்களின் தரத்தை கண்காணிக்க, 1947-ம் ஆண்டு இந்திய தரநிர்ணய அமைப்பு (ஐ.எஸ்.ஐ.) உருவாக்கப்பட்டது. பெருகிவரும் வளர்ச்சிக்கு ஏற்ப இந்த அமைப்புக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் 1986-ம் ஆண்டு இந்திய தரநிர்ணய அமைவனச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அது 1987-ல் இந்திய தரநிர்ணய அமைப்பாக (பி.ஐ.எஸ்.) மாற்றம் செய்யப்பட்டது.

நோக்கம்

பொருட்களின் தரத்தை தேசிய அளவில் நிர்ணயம் செய்து தரச் சான்றிதழ் வழங்குவதுடன் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவது, சர்வதேச அளவில் இந்திய பொருட்களின் தரத்திற்கு உத்திரவாதம் அளித்து பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு உறுதுணையாக இருப்பது போன்றவைதான் அதன் நோக்கம் ஆகும்.

இவ்வாறு பல்வேறு உலோகப் பொருட்கள், உணவுப் பொருட்களுக்கு எல்லாம் தரநிர்ணயம் செய்யப்பட்ட போதிலும் தங்கத்திற்கு மட்டும் தரநிர்ணயம் செய்ய போதுமான வழிமுறைகள் செய்யப்படாமல் இருந்து வந்தது.

சேதார இழப்பு

தங்கத்தை பொறுத்த அளவில் 24 கேரட் சுத்த தங்கத்தை நேரடியாக அணிகலன்களாக செய்ய முடியாது. அதனுடன் செம்பு மற்றும் வெள்ளி போன்ற பிற உலோகங்களை கலந்து 22 கேரட் அளவிற்கு தங்கத்தை மாற்றம் செய்த பிறகே அதனை வளைத்து நெளித்து மக்கள் விரும்பும் வகையிலான அணிகலன்களை செய்ய முடியும்.

இதனை பயன்படுத்தி தங்கத்தை வாங்கும் மக்களிடம் செய்கூலி, சேதாரம் என கூடுதலான பணத்தை பெற்ற போதிலும், விற்பனை செய்யும் வியாபாரிக்கு வியாபாரி தங்கத்தின் தரம் வேறுபட்டே காணப்பட்டு வந்தது.

உதாரணமாக ஒரு வியாபாரியிடம் வாங்கிய தங்க நகையை கொஞ்சநாள் கழித்து விற்பனை செய்கிறோம். அதற்கு பதிலாக புதிய நகைகளை வாங்குகிறோம். அப்போது அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? நாம் கொடுத்த நகையில் அதிக அளவில் சேதாரத்தை கழித்து தங்கத்தின் மதிப்பை குறைத்துக் கூறி கூடுதலாக பணத்தை பெற்றுக் கொண்ட பின்னரே புதிய தங்க நகைகளைத் தருகிறார்கள்.

'ஹால்மார்க்' முத்திரை

இதுபோன்ற பிரச்சினைகளை களைய இந்திய தரநிர்ணய அமைப்பு சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் 'பி.ஐ.எஸ். ஹால்மார்க்' என்ற பெயரில் ஹால்மார்க் நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது.

இதனால், தங்க நகை உற்பத்தியாளர்கள் உருவாக்கும் ஆபரணங்களை இந்திய தரநிர்ணய மையங்களில் காண்பித்து அவற்றின் தரத்தை சோதனை செய்து, ஹால்மார்க் முத்திரையை பெற்று விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இத்தகைய ஹால்மார்க் முத்திரை பெறப்பட்ட நகைகளை மக்கள் மறுவிற்பனை செய்து புதிய வடிவத்தில் நகைகளை பெறும் போது பெரும் அளவில் சேதாரம் கழிக்கப்படாமல் மக்களின் பணம் மிச்சப்படுத்தப்பட்டது.

இவ்வாறு ஹால்மார்க் முத்திரையிடப்படும் நகைகளில் 4 அடையாளங்கள் இடப்பட்டு வந்தன. அதில் முதல் அடையாளம் இந்திய தரநிர்ணய அமைப்பு குறியீடு, 2-வது அடையாளம் தங்கத்தின் தூய்மையை குறிக்கும். 3-வது அடையாளம் ஹால்மார்க்கிங் மையத்தையும், 4-வது அடையாளம் தங்க நகையை விற்பனை செய்யும் கடையையும் குறிக்கும்.

தனித்த அடையாள எண்

இந்த நிலையில், ஏப்ரல் 1-ந் தேதி (நேற்று) முதல் 6 இலக்க தனித்த அடையாள எண்ணுடன் (எச்.யூ.ஐ.டி.) ஹால்மார்க் முத்திரை பெறப்பட்ட நகைகளை மட்டுமே கடைகளில் விற்பனை செய்ய முடியும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. புதிய முறையில் வழங்கப்படும் ஹால்மார்க் முத்திரையில் 3 அடையாளங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. முதல் 2 அடையாளங்கள் ஹால்மார்க் முத்திரை வழங்கிய மையத்தையும், நகையை தயாரித்த கடையையும் குறிக்கும். 3-வது அடையாளமானது 6 இலக்க தனித்த அடையாள எண் (எச்.யூ.ஐ.டி.) ஆகும்.

இந்த 6 இலக்க தனித்த அடையாள எண்ணை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள 'பிஸ் கேர்' (BIS CARE) செயலியில் சோதனை செய்து பார்க்கும்போது தங்க நகையின் மொத்த தகவலும் தெரிந்துவிடும்.

அதாவது நகைக் கடையின் பெயர், முகவரி, ஹால்மார்க் முத்திரை வழங்கிய மையத்தின் பெயர், நகைக் கடையின் பதிவு எண், ஹால்மார்க் முத்திரை வழங்கிய மையத்தின் அங்கீகார எண், எந்த தேதியில் ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டது, ஆபரணத்தின் பெயர் (மோதிரம், கம்மல், செயின்), முக்கியமாக நகையின் தூய்மை மற்றும் கேரட் அளவு உள்ளிட்ட அனைத்து தகவல்களும் தெரிந்துவிடும்.

இதன் மூலம் பொதுமக்கள் இனி வாங்க போகும் நகையின் தூய்மை, தரம் உள்ளிட்ட விவரங்களை நகையை வாங்கும் முன்பே 'பிஸ் கேர்' செயலி மூலம் தெரிந்து கொண்டு நகைகளை வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அறிமுகமாகி இருக்கும் 6 இலக்க தனித்த அடையாள எண்ணுடன் (எச்.யூ.ஐ.டி.) கூடிய ஹால்மார்க் முத்திரை பொதுமக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ குழப்பத்தை ஏற்படுத்துகிறதா? அல்லது நம்பிக்கை தருகிறதா? என்பது குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை பார்ப்போம்.

மக்களை ஏமாற்ற முடியாது

நாமக்கல்லை சேர்ந்த சாய்குமரன் நகைக்கடை உரிமையாளர் குமரன் கூறியதாவது:-

இனிவரும் காலங்களில் ஹால்மார்க் முத்திரைகளுக்கு மாற்றாக 'ஹால்மார்க் யூனிக் ஐடெண்டிட்டி' (எச்.யூ.ஐ.டி.) என்ற 6 இலக்க தனித்த அடையாள எண்ணுடன் கூடிய ஹால் மார்க் முத்திரை பெற்றுதான் நகைகளை விற்பனை செய்ய முடியும். இதனால் எந்த வியாபாரியும் மக்களை ஏமாற்ற முடியாது. வாடிக்கையாளர்கள் நகையை வாங்கும் முன்பே 'ஹால்மார்க் யூனிக் ஐடெண்டிட்டி' எண்ணை இணையதளத்தின் மூலம் பரிசோதித்து நகையின் தரம் மற்றும் எடையை துல்லியமாக அறிந்து கொண்ட பின்னர் வாங்கலாம்.

மேலும் எந்த வியாபாரியும் குறைந்த தரத்தில் தங்கத்தை விற்பனை செய்ய முடியாது. இது வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த பயன் உள்ளதாகும். நகைக்கடையை நம்ப வேண்டியதில்லை. ஒவ்வொரு பொருளுக்கும் 'ஹால்மார்க் யூனிக் ஐடெண்டிட்டி' எண் இருக்கிறது. அதனை ஆய்வு செய்து நகையை நம்பி வாங்கிக் கொள்ளலாம். ஜி.எஸ்.டி. இல்லாமல் தரம் குறைந்த, அளவு குறைந்த நகைகளை யாரும் விற்பனை செய்ய முடியாது என்பதால், பொதுமக்களுக்கு சிறப்பான வரவேற்கக்கூடிய ஒரு திட்டம் ஆகும்.

வரவேற்கத்தக்கது

திருச்செங்கோட்டை சேர்ந்த பேராசிரியை திவ்யா:-

இதுவரை நாம் நகை கடை உரிமையாளர் சொல்வதை நம்பியே நகைகளை வாங்கி வந்தோம். ஆனால் 6 இலக்க தனித்த அடையாள எண்ணுடன் கூடிய ஹால்மார்க் முத்திரை அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதால், முன்கூட்டியே குறிப்பிட்ட ஒரு நகையின் தரத்தை நம்மால் தெரிந்து கொள்ள முடியும். இதனால் நம்மை யாரும் ஏமாற்ற முடியாது.

ஒருசில சிறிய கடைகளில் நகை வாங்க செல்லும் போது, ரூ.50 அல்லது ரூ.100 விலையை குறைத்துக் கூறி தரம் குறைவான நகைகளை விற்பனை செய்பவர்களும் உண்டு. ஆனால், இனிமேல் இதுபோன்று யாரையும் ஏமாற்ற முடியாது. 22 காரட் தரம் கொண்ட நகைக்கு பதில் 18 காரட் தரம் கொண்ட நகையை இனி யாரும் விற்பனை செய்ய முடியாது. எனவே, புதிய ஹால்மார்க் முத்திரை முறையை நான்பெரிதும் வரவேற்கிறேன்.

முழு நம்பிக்கை ஏற்படுகிறது

பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரை சேர்ந்த இல்லத்தரசி ஜோதி:-

கடந்த காலத்தில் நகைக்கடையினரின் மீது கொண்ட நம்பிக்கையில் தான் நகைகளை வாங்கி வந்தோம். அதன்பிறகு ஹால்மார்க் முத்திரை வந்தது ஓரளவு நகைகள் மீதான நம்பிக்கையை வழங்கியது. தற்போது அதன் பரிணாமமாக 6 இலக்க தனித்த அடையாள எண்ணுடன் கூடிய ஹால்மார்க் முத்திரை வந்துள்ளது. இதன் மூலம் நகைகளை வாங்கும் முன்பே நகைகளின் தரம், அளவு உள்ளிட்டவற்றை தெரிந்து கொண்டு நகைகளை வாங்கலாம் என்கிறார்கள். இது நகைகள் மீது முழு நம்பிக்கையை அளிக்கிறது.

பொதுமக்கள் சிறிது சிறிதாக குருவி சேர்ப்பது போல பணத்தை நகைச் சீட்டுகளில் கட்டி வாங்கும் நகைகளை இனி ஏமாற்ற முடியாது என்பது மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது. புதிய ஹால்மார்க் முறை வந்துவிட்டதால், பழைய ஹால்மார்க் முத்திரையுடன் பெறப்பட்ட தங்கத்தின் தரம் குறைவானது என்று கூறி மாற்று நகை வாங்க வரும்போது, அதன் விலையை குறைக்காமல் இதே போன்று முழுமையான தரம் உடைய தங்கம்தான் என்பதை ஏற்றுக் கொண்டு புதிய ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட வேண்டும்.

எளிதில் புகார் தெரிவிக்க முடியும்

எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்த பூங்கொடி:-

6 இலக்க தனித்த அடையாள எண்ணுடன் கூடிய ஹால்மார்க் முத்திரையுடன்தான் தங்க நகைகளை விற்பனை செய்ய முடியும் என்று இந்திய தர நிர்ணய அமைப்பு அறிவித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நகைகளின் விவரங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வதன் மூலம் நகைகளை வாங்குவதில் எவ்வித ஏமாற்றமும் இருக்காது.

நாம் நகைகளை வாங்கும் போது நமது முகவரி மற்றும் செல்போன் எண்கள் நகைக்கடைகளில் பதிவாகிவிடும். இதனால், ஒருவேளை நகை தொலைந்தால்கூட கடைகளில் சென்று எங்கள் நகைக்குரிய 6 இலக்க எண்ணை கேட்டு தெரிந்து கொண்டோ அல்லது நகை வாங்கும் போதே ஒவ்வொரு நகைக்கான 6 இலக்க எண்ணை டைரியில் குறித்து வைத்திருந்தாலோ, போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவிக்க வசதியாக இருக்கும். மேலும் நகைகள் மீட்கப்படும் போது, போலீசார் அந்த 6 இலக்க எண்ணின் அடிப்படையில் நகைகளை திரும்ப ஒப்படைக்க வசதியாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story