தூக்கில் தொங்க விடப்பட்ட சாமியார் உருவபொம்மை
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுத்த சாமியாரின் உருவபொம்மையை தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுத்த சாமியாரின் உருவபொம்மையை தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலை மிரட்டல்
சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதற்கிடையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரம்மஹம்ச ஆச்சாரி யார் என்ற சாமியார் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில், அவரது தலைக்கு ரூ.10 கோடி தருவதாக கூறி இருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. சாமியாரின் மிரட்டலுக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
மேலும் சாமியாரை கண்டித்து அவரின் உருவபொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வந்தனர். இதுமட்டுமின்றி அந்த சாமியார் மீது போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
தூக்கில் தொங்கிய உருவபொம்மை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பொள்ளாச்சி- பாலக் காடு ரெயில்வே மேம்பாலத்தில் ஒருவர் தூக்கில் தொங்குவதாக நகர மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று பார்த்தனர்.
அப்போது, உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுத்த சாமியாரின் உருவபொம்மையை செய்து யாரோ தூக்கில் தொங்க விட்டு சென்றது தெரியவந்தது.
உடனே போலீசார் அந்த உருவபொம்மையை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சியில் மேம்பாலத்தில் உருவபொம்மை தொங்க விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.