அனுமன் ஜெயந்தி விழா


அனுமன் ஜெயந்தி விழா
x
தினத்தந்தி 23 Dec 2022 6:45 PM GMT (Updated: 23 Dec 2022 6:47 PM GMT)

பொள்ளாச்சி கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது.

அனுமன் ஜெயந்தி

பொள்ளாச்சி கடை வீதியில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து கோவில் வளாகத்தில் ஆஞ்சநேயர் வீதி உலா வந்தார். மேலும் ஆஞ்சநேயருக்கு 108 வடைமாலை சாத்தப்பட்டு இருந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

சந்தன காப்பு அலங்காரம்

இதேபோன்று சோமந்துறைசித்தூர் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

டி.கோட்டாம்பட்டியில் உள்ள கோதண்டராமர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி ஜெயவீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஆஞ்சநேயர் சந்தன காப்பு அலங்காரத்தில் ராஜாதி ராஜனாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

வரதராஜ பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஆஞ்சநேயர் வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அமாவாசை

மார்கழி மாத அமாவாசையையொட்டி ஆனைமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர். அவர்கள் நேற்று அதிகாலையில் ஆனைமலை உப்பாறு மற்றும் ஆழியாறில் நீராடி முதல் கால பூஜையில் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். மேலும் உச்சிபூஜை, சாயரட்ச பூஜை, தங்கமலர் அர்ச்சனை உள்ளிட்ட பூஜையில் பங்கேற்று பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்த அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. கோவிலுக்கு வர மதுரை, தேனி, கம்பம், திண்டுக்கல், பழனி, திருப்பூர், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் கோவில் வளாகத்தில் ஆனைமலை போலீசார் மற்றும் ஊர் காவலர் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயலட்சுமி மற்றும் கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

பிளேக் மாரியம்மன்

இதேபோன்று கிணத்துக்கடவு அருகே சூலக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து மாரியம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சந்தனத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை மற்றும் கேரளாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சூலக்கல் மாரியம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

இதேபோன்று பொன்மலை மீது உள்ள வேலாயுதசாமி கோவில், சிவலோகநாதர் உடனமர் சிவலோகநாயகி கோவில், கரிய காளியம்மன் கோவில், பிளேக் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


Next Story