மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாட்டம்


மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாட்டம்
x

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

திருவள்ளூர்

பெரியகுப்பம், ராஜாஜிபுரம், தேவி மீனாட்சி நகர் பகுதியில் 32 அடி உயரம் உள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. காலை 7 மணி அளவில் விழா மங்கல இசையுடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து 32 அடி உயரமுள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 100 கிலோ எடை கொண்ட பல்வேறு வகையான மலர்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து சுவாமிக்கு வடமாலை சாற்றப்பட்டது. இதனை திருவள்ளூர், பூந்தமல்லி, சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர். அதேபோல திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மீஞ்சூர் அடுத்த வெள்ளிவாயல்சாவடி கிராமத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் வளாகத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று அனுமான் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு வண்ண மலர்களால் ஆஞ்சநேயர் பெருமாள் அலங்கரிக்கப்பட்டு வடை மாலை அணிவிக்கப்பட்டது. இந்த விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர். அதேபோல் மீஞ்சூர், புங்கம்பேடு, பொன்னேரி ஆகிய இடங்களில் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

திருத்தணி அடுத்த நல்லாட்டூர் கிராமத்தில் உள்ள வீரமங்கள ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. இதில், ஆஞ்சநேயருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை, துளசி, செந்தூரம் வெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு காப்புகள் அணிவிக்கப்பட்டது.

விழாவில் பா.ஜ.க., மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி உள்பட ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேய பெருமானை வழிப்பட்டனர்.

இதேபோல் கே.ஜி.கண்டிகையில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி மூலவருக்கு பால், பன்னீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேகம் நடந்தது. பின்னர், கோவில் வளாகத்தில் உள்ள, 35 அடி உயரமுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

திருத்தணி மேட்டுத் தெருவில் உள்ள வீரஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி ஓட்டி, மூலவருக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதே போல், திருத்தணியை சுற்றியுள்ள கிராமங்களில் ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


Next Story