ரெயில்களில் வடமாநில தொழிலாளர்கள் தொல்லை


முன்பதிவு செய்த பெட்டிகளில் சாதாரண டிக்கெட்டில் பயணம் செய்யும் வடமாநில தொழிலாளர்கள் பற்றி பல்வேறு தரப்பினர் கருத்துகள் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல்

தமிழ்நாட்டுக்கு தினமும் வட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெரிய நகரங்கள் முதல், குக்கிராமங்கள் வரை அவர்கள் ஊடுருவி விட்டார்கள்.

பெரிய நிறுவனம் என்றாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, அங்கிங்கெனாதபடி எங்கும் வேலை செய்கிறார்கள்.

ஒரு சிறு டீக்கடையை எடுத்துக் கொண்டாலும் கல்லாவில் இருப்பவரைத் தவிர, பலகாரங்கள் போடுவது, டீப்போடுவது, கிளாசுகளை கழுவுவதுவரை அவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

அவர்கள் கடும் உழைப்பாளிகள். மறுப்பதற்கு இல்லை. ஆனால் அதற்கு இணையாக உழைக்கத் தெரிந்த நம்மவர்கள் என்ன ஆனார்கள்?

இலவசங்களால் கொஞ்சம் வயிற்றில் பசியாறிப் போவதால், சோம்பேறி ஆனார்கள். விளைவு நாம் செய்யவேண்டிய வேலைகளை, வடமாநிலத்தார் வந்து செய்கிறார்கள்.

கல்லாவை நம்மிடம் அவர்கள் கைப்பற்றாமல் இருந்தால், சரி.

தொல்லைகள்

அதேநேரம் வடமாநில தொழிலாளர்களின் அதிக வரவால் நமக்கு பல்வேறு வேலைகள் நடந்தாலும் தொல்லைகளும் இருக்கத்தான் செய்கின்றன. எடுத்துக்காட்டாக சொல்வது என்றால், ரெயில் பயணங்களில் அவர்களின் செயல்கள் நம்மை எரிச்சல் அடைய செய்கின்றன. பலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வது, வகுப்பு மாறி பயணம் செய்வது, சாதாரண டிக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு முன்பதிவு செய்த பெட்டிகளில் புகுந்து பயணம் செய்வது, பாக்குகளை வாயில் போட்டு குதப்பி கண்ட, கண்ட இடங்களில் உமிழ்வது, குற்றச் செயல்களில் ஈடுபடுவது போன்ற சட்டவிரோதச் செயல்களை அச்சம் இல்லாமல் செய்கிறார்கள்.

இதுபற்றி பல்வேறு தரப்பினர் வெளியிட்டு இருக்கும் கருத்துகள் வருமாறு:-

விரைவில் நிரந்தர தீர்வு

இந்திய ரெயில்வேயின் கீழ் செயல்படும் அகில இந்திய ரெயில் பயணிகள் நலவாரிய உறுப்பினர் ரவிச்சந்திரன் கூறும்போது, 'முன்பதிவு செய்த பெட்டிகளில் சாதாரண வகை டிக்கெட்டுகளை வைத்திருக்கும் வடநாட்டுத் தொழிலாளர்கள் பயணம் செய்வதாக எங்கள் கவனத்துக்கு வந்து உள்ளது. வாராந்திர ரெயில்களில்தான் இந்த பிரச்சினை இருந்தது. தற்போது அனைத்து ரெயில்களிலும் இந்த பிரச்சினை இருப்பதாக பரவலாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக ரெயில்வே துறையின் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உள்ளோம். அவர்களும் இதுகுறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். ரெயில்வே பாதுகாப்பு படையினர் இரவு நேர ரெயில்களில் மட்டுமே இருக்கிறார்கள், பகல் நேர ரெயில்களில் போலீசார் இருப்பதில்லை என்ற புகாரும் வந்து உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. விரைவில் இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்' என்றார்.

பயணிகள் பாதிப்பு

நாமக்கல் மாவட்ட ரெயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் சுப்ரமணி கூறியதாவது:-

தமிழகத்தில் மக்கள் பெரிதும் நம்பி இருப்பது ரெயில் போக்குவரத்து. தொலைதூர பயணத்துக்கு ரெயில் பயணம் மிகவும் வசதியாகவும், செலவு குறைவாகவும் இருக்கிறது. ரெயிலில் டிக்கெட் புக் செய்து பயணிப்பது நமக்கு பல விதங்களில் நன்மை தருகிறது. பொதுவாக 120 நாட்களுக்கு முன்பு இருந்து நாம் பயண டிக்கெட் புக் செய்து கொள்ளலாம். நமக்கு என்று ஒரு இருக்கை எண் வழங்கப்பட்டு விடும். நாம் பயண தேதியில் அந்த இருக்கையில் அமர்ந்து கொள்ளலாம்.

தற்போது இந்த நடைமுறையில் பல இன்னல்களை மக்கள் சந்திக்கின்றனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து வட மாநிலம் செல்லும் ரெயில்களில் நமக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வட மாநில மக்கள் அமர்ந்து கொண்டு வாக்கு வாதம் செய்கின்றனர். சில நேரங்களில் அது கைகலப்பு வரை சென்று விடுகிறது. இதனால் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகள் பெரிதும் பாதிக்கபடுகின்றனர்.

இதற்கு தீர்வு காண ரெயில்வே நிர்வாகம் விமான நிலையத்தில் உள்ளது போல ரெயில் நிலையத்திற்கு உள்ளே டிக்கெட் பெற்றவர்களை மட்டும் பிளாட்பாரத்தில் நுழைய அனுமதிக்க வேண்டும். அதே போல் ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் ரெயில் வந்து நிற்கும்போது ஒவ்வொரு கோச்ச்சிலும் டிக்கெட் பரிசோதகர் நின்று பயணிகளின் டிக்கெட்டை பரிசோதனை செய்து உள்ளே அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் அத்துமீறி மற்றவர்கள் நுழைவது தடுக்கப்படும்.

சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும்

திருச்செங்கோட்டை சேர்ந்த தொழில்அதிபர் சவுத்திரி:-

நான் தொழில் நிமித்தமாக அடிக்கடி வடமாநிலங்களுக்கு சென்று வருகிறேன். குறிப்பாக ராஜஸ்தான், மராட்டியம், குஜராத், ஒடிசா, ஐதராபாத் போன்ற பகுதிகளுக்கு செல்வேன். பெரும்பாலும் ரெயில் பயணத்தையே தேர்வு செய்வேன். முன்கூட்டியே டிக்கெட்டும் புக் செய்து விடுவேன்.

வடமாநிலங்களில் அங்குள்ள தொழிலாளர்கள் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்யும் டிக்கெட்டை எடுத்து கொண்டு, நமது அருகில் வந்து இருந்து கொண்டு போதை பாக்குகளை போட்டு துப்புவது, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவது போன்ற செயல்களை செய்வார்கள். அந்த நிலை தற்போது தென்இந்திய ரெயில்களிலும் கொஞ்சம், கொஞ்சமாக வர தொடங்கி உள்ளது. எனவே ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து முன்பதிவு பெட்டிகளில் அடிக்கடி சோதனை செய்து, தேவையில்லாத நபர்கள் அமர்ந்து இருப்பதால் அவர்களை உடனடியாக இறக்கி விட வேண்டும். சுகாதாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும்.

தரையில் அமர்ந்து பயணம்

எருமப்பட்டியை சேர்ந்த பாலகுமார்:-

நான் குடும்பத்துடன் அடிக்கடி கோவில்களுக்கு ரெயிலில் செல்வது உண்டு. தற்போது ரெயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் சாதாரண வகை டிக்கெட்டுகளை பெற்றவர்கள் பயணிப்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் உள்ள கழிவறை, வாசல்களில் அதிகளவு தரையில் அமர்ந்து வடநாட்டு தொழிலாளர்கள் பயணிக்கின்றனர்.

72 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் சுமார் 100 பேர் வீதம் பயணிக்கின்றனர். இதனால் சவுகரியமாக பயணம் செய்ய விரும்பி முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு ரெயில் பயணத்தின் போது அசவுகரியங்கள் தான் ஏற்படுகின்றன. குடும்பத்துடன் ரெயிலில் பயணிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டு வருகிறது. இதனை ரெயில்வே நிர்வாகம் வேடிக்கை பார்க்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கைது நடவடிக்கை

மோகனூர் ரெயில் பயணிகள் நலச்சங்க உறுப்பினர் செல்வராஜ்:-

நமக்கு ஒதுக்கப்பட்ட முன்பதிவு செய்த பெட்டிகளில் உள்ள படுக்கைகளில் அமர்ந்திருக்கும் வடநாட்டினரை எழுந்திருக்க சொன்னால் அவர்கள் கேட்பதில்லை. இதற்கு மொழியும் தடையாக இருக்கிறது. மேலும் அவர்கள் கூட்டமாக வருவதால், நம்மால் அவர்களிடம் ஓரளவுக்கு மேல் பேச முடியவில்லை. வாயில் போதை பாக்குகளை போட்டுவிட்டு ஜன்னல்களில் உமிழ்ந்து அசிங்கப்படுத்துவதுடன், சுற்றுப்புறத்தை சுகாதாரம் இல்லாமல் செய்கின்றனர். அதேபோல் அருகில் உள்ள இருக்கையில் இருப்பதால் பெண்களின் பாதுகாப்பும் கேள்வி குறியாகி வருகிறது. எனவே ரெயில்வே நிர்வாகம் தேவை இல்லாமல் முன்பதிவு செய்யும் பெட்டிகளில் பயணம் செய்யும் வடமாநில தொழிலாளர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

டிக்கெட் கட்டண சலுகை ரத்து; சேவையும் கேள்விக்குறி

மூத்த பயணிகள் ஆதங்கம்

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்ட டிக்கெட் கட்டண சலுகைகளை கொரோனாவிற்கு பிறகு ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்தது. தற்போது யாராக இருந்தாலும் முழுக் கட்டணத்தில்தான் பயணம் செய்ய வேண்டியது இருக்கிறது. அதுவும் குறிப்பாக தட்கல், பிரீமியம் தட்கல் என்ற முறையில் ஆம்னி பஸ்களில் விதிக்கப்படும் கட்டணம் போன்று கட்டணத்தை ரெயில்வே நிர்வாகம் உயர்த்தி வசூலித்து வருகிறது. வேறுவழியின்றி முதியவர்கள், பெண்கள், நோயாளிகள் அதிகக் கட்டணம் செலுத்தி ரெயிலில் பயணம் செய்கின்றனர். ஆனால் கட்டணத்தை முழுமையாக பெறும் ரெயில்வே நிர்வாகத்தால் ஏன் முழுமையான சேவையை வழங்க முடியவில்லை. உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருந்தும் ரெயிலில் முறையாகப் பயணிக்க முடியாத நிலைக்கு யார் காரணம்? இதற்கு எப்போது ரெயில்வே நிர்வாகம் தீர்வு காணப்போகிறது என்று சென்னை சென்டிரல் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையத்தில் இருந்து வடநாட்டு ரெயிலில் பயணம் மேற்கொண்ட மூத்த பயணிகள் சிலர் முணுமுணுத்து சென்றனர்.


Next Story