சொந்த ஊருக்கு திரும்பும் அறுவடை எந்திரங்கள்


சம்பா, தாளடி அறுவடை பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதால் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த அறுவடை எந்திரங்கள் மீண்டும் சொந்த ஊர்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டன.

தஞ்சாவூர்


சம்பா, தாளடி அறுவடை பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதால் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த அறுவடை எந்திரங்கள் மீண்டும் சொந்த ஊர்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டன.

சம்பா, தாளடி அறுவடை

தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு 1 லட்சத்து 37 ஆயிரம் எக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டது. தற்போது சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சையை அடுத்த ஒரத்தநாடு, பொய்யுண்டார் கோட்டை, பாச்சூர், வடக்கூர் ஆகிய பல பகுதிகளில் அறுவடைப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் நடந்து வருகிறது. இதில் ஒரு சில விவசாயிகள் குறுவை சாகுபடி செய்யாமல் ஒரு போக சம்பா சாகுபடியை மேற்கொண்டு முன்னதாகவே அறுவடையை முடித்து உள்ளனர். அறுவடை செய்யப்பட்ட வயல்களில் உளுந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.தாமதமான பகுதிகளில் மட்டும் இன்னும் அறுவடை பணிகள் நடைபெற வேண்டி உள்ளது.

வெளிமாவட்டங்களில் இருந்து...

தஞ்சைமாவட்டத்தில் அறுவடை பணிகளுக்காக பெரம்பலூர், சேலம், ஆத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து அறுவடை எந்திரங்கள் வந்துள்ளன. அங்கிருந்து அறுவடை எந்திரங்கள் லாரிகளில் எடுத்து வரப்பட்டு அறுவடை பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. இடையில் தொடர்ந்து மழை பெய்ததால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன. அதன் பின்னர் வெயில் அடிக்கத்தொடங்கியதில் இருந்து அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்றன.

அறுவடை செய்யப்படும் வயல்களில் உள்ள வைகோல்களை எந்திரங்கள் மூலம் சுருட்டி உடனுக்குடனே வெளிமாவட்டங்களுக்கு ஒரு கட்டு வைக்கோல் ரூ.100-150 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது அறுவடை பயணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. மேலும் தாமதமாக நடவு செய்யப்பட்ட இடங்களில் மட்டும் அறுவடை பணிகள் நடைபெற உள்ளது.

சொந்த ஊருக்கு சென்றன

இதனால் வெளியூர்களில் இருந்து கொண்டுவரப்பட்ட அறுவடை எந்திரங்களை, அதன் உரிமையாளர்கள் மீண்டும் சொந்த ஊர்களுக்கே எடுத்துச்செல்கின்றனர். லாரிகளில் அறுவடை எந்திரங்களை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். மீண்டும் அறுவடை காலக்கட்டத்தில் எந்திரங்கள் கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது.


Next Story