சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரூ.48¼ லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்


சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரூ.48¼ லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
x

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரூ.48¼ லட்சம் ஹவாலா பணத்தை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை

ரெயில்கள் மூலம் போதைப்பொருட்கள், ரேஷன் அரிசி, ஹவாலா பணம் ஆகியவற்றை கடத்துவதை தடுக்க ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில், நேற்று சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் காலை 10 மணியளவில் குஜராத்தில் இருந்து சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு நடைமேடை 9-ல் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. பயணிகளின் உடைமைகளை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் ரெயில் பெட்டிக்குள் நடமாடுவதை கண்டனர். இதையடுத்து, ரெயில் பெட்டிக்கு உள்ளே சென்ற போலீசார் அவரிடம் விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணான வகையில் பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்து அவருடைய பையை வாங்கி சோதனை செய்தனர்.

அதில், கட்டுக்கட்டாக ரூ.48¼ லட்சம் இருந்தது. ஆனால், அதற்கு எந்தவித ஆவணங்களும் இல்லை. இதையடுத்து, அவரை ஆர்.பி.எப். அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த நாகாவென்டகா நரேந்திரா (வயது 36) என தெரியவந்தது. இவர் விஜயவாடாவில் இருந்து இந்த ரெயிலில் பயணம் செய்துள்ளார். இதையடுத்து, அவர் கொண்டுவந்த பணம் ஹவாலா பணம் என்று உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து, சென்னை வருமான வரித்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் விரைந்து வந்து அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை ரெயில்வே போலீசார், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story