கையில் சங்கிலியுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு
கையில் சங்கிலியுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு
கோவை
ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து கையில் சங்கிலியை கட்டிக்கொண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
கையில் சங்கிலியுடன் வந்தனர்
கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி சர்மிளா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் சங்கிலியை கையில் கட்டியபடி வந்து மனு அளித்தனர். அந்த மனுவில், அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட ஆயுள் தண்டனை கைதிகள் 37 பேரை விடுதலை செய்ய கூடாது என்றனர்.
மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், தேக்கம்பட்டி அருகே உள்ள சமயபுரத்தில் கடந்த 2014-ம் ஆண்டு முறைகேடாக 132 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆகவே தகுதி இல்லாத நபர்களுக்கு வழங்கிய பட்டாவை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்றனர்.
அத்திக்கடவு குழாய் உடைப்பு
பொகலூர் ஊராட்சி, கோபிராசிபுரம் மற்றும் கூளேகவுண்டன்புதூர் பகுதிகளை சேர்ந்த ஊர் பொதுமக்கள் அளித்த மனுவில், அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் குழாய் அமைத்து 746-ம் குட்டைக்கு தண்ணீர் வருவதை ஒருவர் தடுக்கிறார். மேலும் இந்த திட்டத்தில் பதிக்கப்பட்ட குழாய், மற்றும் சோலார் பேனல் உபகரணங்களை பொக்லைனை வைத்து உடைத்துள்ளனர்.
இதனை காரணம் காட்டி, இந்த குட்டைக்கு தண்ணீர் விடுவதை கைவிட்டு, பொகலூர் கிராமத்தில் உள்ள வேறு குட்டைக்கு மாற்றம் செய்துள்ளனர். விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வரும் எங்கள் ஊருக்கு அவினாசி-அத்திக்கடவு திட்டத்தில் எங்கள் பகுதி குட்டையை நிரப்பவும், ஜல்-ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அடிப்படை வசதி
கோவைப்புதூர், அறிவொளிநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், எங்கள் பகுதியில் 672 குடியிருப்புகள் உள்ளன. போதுமானஅடிப்படை வசதிகள் இல்லை. உப்பு தண்ணீர் மாதம்ஒருமுறைதான்வருகிறது. குப்பைகளும் அகற்றப்படாததால் சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் 10 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். எனவே சுகாதார பணியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதேபோல் பட்டா வழங்க கோரியும், அடிப்படை வசதி கேட்டும் பலரும் மனு அளித்தனர்.