மனு கொடுத்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக இலவச தையல் எந்திரம்-கலெக்டர் வழங்கினார்
சிவகங்கையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 66 பேருக்கு ரூ.41 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
சிவகங்கை
சிவகங்கையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 66 பேருக்கு ரூ.41 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
குறை தீர்க்கும் நாள் கூட்டம்
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா கோருதல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 318 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
தையல் எந்திரம்
மேலும் மாற்றுத்திறனாளி ஒருவர் தையல் எந்திரம் வழங்க கோரி மனு அளித்தார். இதைதொடர்ந்து கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவருக்கு தையல் எந்திரத்தை வழங்கினார். இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை, பொது சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மாவட்ட வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 66 பேருக்கு ரூ.41 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். அத்துடன் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திட்டத்தின் கீழ் புதுமைப்பெண் திட்டத்தில், மன்னர் துரைசிங்கம் கலைக்கல்லூரியில் உயர்கல்வி பயின்று வரும் 10 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 பெறுவதற்கான அனுமதியையும் கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனர் வானதி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் காமாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரெத்தினவேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலட்சுமி உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.