போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த துணை சூப்பிரண்டு, வணிகவரி அதிகாரி உள்ளிட்ட 4 பேரை டிஸ்மிஸ் செய்யுங்கள்- மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த துணை சூப்பிரண்டு, வணிகவரி அதிகாரி உள்ளிட்ட 4 பேரை டிஸ்மிஸ் செய்யுங்கள்- மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x

போலி சான்றிதழ் கொடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிக வரி உதவி கமிஷனர் பணிகளில் சேர்ந்துள்ள 4 பேரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது

மதுரை


டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு

மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சக்திராவ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2019 ஜனவரி 1-ல் துணை ஆட்சியர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு முடிந்து நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வில் எனது பெயர் இடம்பெறவில்லை. தமிழ்வழியில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டு பட்டியலிலும் எனது பெயர் இடம்பெறவில்லை.

இதுகுறித்து விசாரித்தபோது தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான இட ஒதுக்கீட்டு சலுகை, தொலைநிலை கல்வியில் படித்து பட்டம் பெற்றவர்களுக்கும் வழங்கப்பட்டிருந்தது தெரியவந்தது. எனவே, கல்லூரியில் நேரடியாக சென்று படித்து பட்டம் பெற்றவர்களுக்கு மட்டும் புதிய பட்டியல் வெளியிட்டு இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரணை செய்த ஐகோர்ட்டு பல்வேறு உத்தரவுகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கும், தமிழக அரசுக்கும் பிறப்பித்து இருந்தது. இதில் தமிழ்வழிச்சான்றிதழ் வழங்கியதில் காமராஜர் பல்கலைக்கத்தில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கோர்ட்டு அவமதிப்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த மாதம் 2-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டதுடன், லஞ்சஒழிப்புத்துறையின் இடைக்கால நிலை அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

பல்கலைக்கழக போலி சான்றிதழ்

அதேபோல, தமிழ் வழிக்கல்வியில் போலி சான்றுகள் வழங்கியதாக 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான வக்கீல் தெரிவித்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சுப்பிரமணியம், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 14 விண்ணப்பதாரர்கள் போலி சான்றிதழ்கள் கொடுத்ததாக அறிக்கையில் சொல்லிவிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறுவது சரிதானா? இந்த அறிக்கை திருப்திகரமாக இல்லை. டி.என்.பி.எஸ்.சி.யின் இது போன்ற செயல்கள் மாணவர்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தும்.

நாட்டுக்கு ஆபத்து

இது ஒட்டுமொத்த அரசுத்தேர்வுகளின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எல்லாவற்றிலும் ஊழல் நிறைந்துள்ளது. அரசுப்பணிகளுக்கு தேர்வு நடத்துவதில் இருந்து பணி நியமனம் வரை அனைத்திலும் ஊழல் நடக்கிறது. போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேருபவர்கள் மக்களுக்கு எப்படி சேவை செய்வர்? பணியில் சேரும் போதே முறைகேட்டில் ஈடுபடுவர்களால் சமூகத்துக்கு மட்டுமின்றி நாட்டுக்கே ஆபத்து. போட்டித்தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுத்தவர்கள் தேர்வு செய்யப்படுவதுதான் குடிமக்களுக்கான அங்கீகாரம். முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கோர்ட்டை ஏமாற்றும் முயற்சியில் டி.என்.பி.எஸ்.சி. ஈடுபட்டுள்ளது. போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களை பணிநீக்கம் செய்யாதது ஏன்? முறையான விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு என்ன தயக்கம். எனவே, போலி சான்றிதழ் கொடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட பணியில் சேர்ந்துள்ள 4 பேரை பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 1-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

1 More update

Next Story