விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்


விபத்தில் மூளைச்சாவு அடைந்த  வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
x

சங்கரன்கோவில் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

திருநெல்வேலி

சங்கரன்கோவில் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

மூளைச்சாவு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ராமலிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 31). இவர் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் செல்வராஜ் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார். இதனை தொடர்ந்து செல்வராஜ் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது குறித்து அவரது உறவினர்களிடம் டாக்டர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை அவர்கள் ஏற்று, செல்வராஜின் உடல் உறுப்புகளை தானம் கொடுக்க ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து செல்வராஜ் உடலில் இருந்து கல்லீரல், ஒரு சிறுநீரகம் மற்றும் கண் விழிகள் எடுக்கப்பட்டன. முன்னுரிமை அடிப்படையில் வெளிமாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு கல்லீரல் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.

சிறுநீரகம் பொருத்தப்பட்டது

நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு வாலிபரின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் சிறுநீரகம் பொருத்தப்பட்ட அந்த நபர் நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டதில் மருத்துவமனை டீன் ரவிச்சந்திரன் வழிகாட்டுதலின் படி கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் உரிய முறையில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மயக்கவியல் துறை டாக்டர்கள், சிறுநீரகத்துறை டாக்டர்கள், நரம்பியல், சிறுநீரக அறுவை சிகிச்சை துறை டாக்டர்கள் ஆகிய 4 துறை டாக்டர்களுக்கு டீன் ரவிச்சந்திரன் பாராட்டு தெரிவித்தார்.


Next Story