தலைமை ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தலைமை ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் தங்கவேல் தலைமையில் பெரம்பலூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் தனி முன்னுரிமை பட்டியலும், முதுநிலை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும் வழங்க வேண்டும். பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும். 12 மாத காலம் மகப்பேறு விடுப்பில் செல்லும் ஆசிரியர்களுக்கு பதிலாக பள்ளிகளில் மாற்று ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு, அகவிலைப்படி நிலுவைத்தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில இணை செயலாளர் வேலு, முன்னாள் மாவட்ட தலைவர் வி.பி.தங்கராஜ், தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர்கள் சுந்தரபாண்டியன், புலவர் ராமர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். முன்னதாக, மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். முடிவில் முன்னாள் மாவட்ட பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்.