மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்கும் தலைமை ஆசிரியர்


மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்கும் தலைமை ஆசிரியர்
x

வளநாடு அருகே மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்கும் தலைமை ஆசிரியர் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருச்சி

அரசு பள்ளி

திருச்சி மாவட்டம், வளநாடு அருகே உள்ள அரசு பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்று வழங்குவதற்கு மாணவர்களிடம் பள்ளி நிர்வாகம் கட்டாய வசூலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் 4 பேர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) சேர்வதற்கு மாற்றுச் சான்றிதழ் மற்றும் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தேவை என்பதால் அதனை வாங்குவதற்கு பள்ளிக்கு சென்றுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கடந்த 2019- 2020-ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு முடித்துள்ளனர். அப்போது கொரோனா காலம் என்பதால் அனைவரும் தேர்ச்சி என்று கல்வித்துறை அறிவித்து சான்றிதழ் வழங்கியிருந்தது. ஆனால் இது போன்ற மேல் கல்வி பயில செல்லும் மாணவர்களுக்கு அவர்கள் முந்தைய தேர்வில் பெற்ற சராசரி மதிப்பெண் அடிப்படையில் பள்ளி நிர்வாகமே மதிப்பெண் சான்றிதழ் வழங்கி வருகிறது.

ரூ.500 லஞ்சம்

இந்த மதிப்பெண் சான்றிதழை பெறுவதற்காக சம்பந்தப்பட்ட 4 மாணவர்களும் பள்ளி தலைமை ஆசிரியரை அணுகிய போது பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களிடம் மதிப்பெண் சான்று வழங்க தலா ரூ.500 வழங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் ஒவ்வொருவரும் ஏ 4 பேப்பர் பண்டல் 2 வாங்கி வருமாறும் கூறியுள்ளார். கையில் பணம் இல்லாத மாணவர்கள் ஒரேயொரு பண்டலை மட்டும் வாங்கி வந்து தலைமை ஆசிரியரிடம் கொடுக்கும்போது அவர் மாணவர்களை திட்டுகிறார்.

மேலும், மற்றொரு சேரில் அமர்ந்துள்ள ஆசிரியை அழைத்து இந்த 4 எருமை மாடுகளையும் வெளியே விரட்டி விடுங்கள். இவர்கள் ஐ.டி.ஐ.யும் படிக்க வேண்டாம், மண்ணாங்கட்டியும் படிக்க வேண்டாம் என்கிறார். பின்னர் மாணவர்கள் காசு இல்லை டீச்சர் அதனால்தான் ஒன்று வாங்கினோம் என்று கெஞ்சுகின்றனர். காசு இல்லேன்னா 10, 12, 13 மார்க் போடட்டுமா? இவிங்களுக்கு இது போதும் என மீண்டும் தலைமை ஆசிரியர் கூறுவதோடு போங்கடா போங்கடா எனவும் விரட்டுவதும் மாணவர்கள் காசு இல்லை என கெஞ்சுவதுமாக அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

சான்றிதழ் வழங்க தலைமை ஆசிரியர் லஞ்சம் கேட்கும் இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே பள்ளி நிர்வாகம் மாணவரிடம் கட்டாய பண வசூல் நடத்துவது பெற்றோர்கள் இடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story